பிரகாசிக்கும் மகத்தான ஒளி The Great Shining Light 57-12-22 1 இன்று காலையில் என்னுடைய பொருள் புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறது. முதலில் மத்தேயு 1-ஆம்… 2-ஆம் அதிகாரத்தில், 1-ஆம் வசனத்திலிருந்து வேதவாசிப்பு இருக்கும். பிறகு, 4-ஆம் அதிகாரத்திலுள்ள 14-ஆம், 15-ஆம் வசனங்களையும் என்னுடைய பொருளாக எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். வார்த்தையை வாசிக்க நான் விரும்புகிறேன், ஏனென்றால் வார்த்தை தேவனாயிருக்கிறது. ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ளவந்தோம் என்றார்கள். 2 பிறகு, 4-ஆம் அதிகாரத்தில், 14-ஆம் வசனத்தில், தீர்க்கதரிசியைக் குறித்துப் பேசுகிறது: கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே, இருளில் இருக்கும் ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 3 நான் என்னுடைய பொருளை… இவ்விதமாக எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்: பிரகாசிக்கும் மகத்தான ஒளி. இது மிகவும் வழக்கத்திற்கு மாறான ஒரு வேதப்பகுதி. 4 மேலும், இந்தக் காலத்தில், கிறிஸ்துமஸ் பருவத்தில், “சத்திரத்தில் இடமில்லை,” “யோசேப்பும் மரியாளும்,” மேலும்—மேலும் “கர்த்தராகிய இயேசுவின் பிறப்பு” ஆகியவற்றைப் பற்றி வழக்கமாக மக்கள் அதிகமாகப் பிரசங்கித்திருக்கிறார்கள். உங்களில் அநேகர் உங்கள் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் அவற்றைக் கேட்கிறீர்கள் என்பதால், அதை வேறொரு விதமாக அணுக முயற்சிக்கலாம் என்று நேற்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். 5 அவ்வாறு நினைத்துக்கொண்டிருந்தபோது, சாஸ்திரிகளையும் நட்சத்திரத்தையும் பற்றிய இது என் மனதில் வந்தது. என்னுடைய கவனத்தை ஈர்த்தது என்னவென்றால், ஒரு சாஸ்திரிக்குக் கிறிஸ்துவோடு என்ன தொடர்பு இருக்கிறது? ஆகவே, இன்றைக்கான இந்தப் பொருளின்மேல் கொஞ்சம் வெளிச்சத்தைக் கொண்டுவரக்கூடிய ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிக்க முயன்று, நேற்று இரவு வெகு நேரம்வரை, மேசையிலேயே தூங்கிப்போகும்வரை, பண்டைய அறிஞர்கள் பலருடைய எழுத்துகளை வாசித்துக்கொண்டிருந்தேன். 6 ஆகவே, இந்தக் காரியங்களைப் பற்றிப் பேசுவது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருக்கிறது, ஏனென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக, தேவன் வழக்கத்திற்கு மாறானவராயிருக்கிறார். தேவன் வழக்கத்திற்கு மாறான விதத்தில் காரியங்களைச் செய்கிறார்; சில நேரங்களில் வழக்கத்திற்கு மாறான நேரத்திலும் செய்கிறார், ஏனென்றால் அவர் மிகவும் வழக்கத்திற்கு மாறானவராயிருக்கிறார். அவரைச் சேவிக்கிறவர்களும் வழக்கத்திற்கு மாறானவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசேஷித்த ஜனங்களாயிருக்கிறார்கள். 7 ஆகவே, இந்தப் பருவத்தில், நம்முடைய சிந்தனையைக் கிறிஸ்துமஸை நோக்கித் திருப்புகிறபோது, அது உண்மையான கிறிஸ்துமஸாக இருக்கவேண்டியதற்குப் பதிலாக, “சாண்டா கிளாஸ்” என்ற கட்டுக்கதைக்கு அதை ஒதுக்கவேண்டியிருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இன்று இந்த நாட்டிலுள்ள அநேக சிறு பிள்ளைகளுக்குக் கிறிஸ்துமஸ் என்றால், “பொம்மைகள் நிறைந்த ஒரு பனிச்சறுக்கு வண்டியும், வீட்டின்மேல் பாயும் சில மர்மமான பனிமான்களும்” என்பதைத்தவிர வேறெதுவும் தெரியாது. பிறகுதான் அது ஒரு கட்டுக்கதை என்பதை அறிந்துகொள்கிறார்கள்; உண்மையான கிறிஸ்துமஸ் கதையை அறிந்துகொள்ளும்போது, அதற்குப் பனிமான்களோடும், மேலங்கியைச் சுற்றி உரோமம் வைத்துக்கொண்டு புகைக்குழாயைப் புகைத்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதனோடும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அறிகிறபோது, அது அவர்களுடைய விசுவாசத்தையும்கூட பாதிக்கிறது. 8 அது நம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட கர்த்தராகிய இயேசுவின் பிறப்பாயிருந்தது. தேவன் இந்த விதத்தில் எப்படிச் செயல்பட்டார் என்பதைப் பார்ப்பது மிகவும் வழக்கத்திற்கு மாறானதாக இருக்கிறது, ஏனென்றால் உலகத்தின் முழு சரித்திரத்திலும் வேறெந்த நேரமும் இதற்குப் பொருத்தமாக இருந்திருக்காது. அது துல்லியமாக இந்த நேரத்தில்தான் இருக்கவேண்டியிருந்தது. இப்போது, சில நிமிடங்களுக்கு அந்தப் பருவத்தையே நாம் நேராகப் பார்ப்போம். 9 கொலைகாரனாகிய ஏரோது ராஜாவாக இருந்த காலம் அது. அப்படித்தான் இருக்கவேண்டியிருந்தது; இரக்கமில்லாத இந்த மனிதன் அந்த நேரத்தில் ராஜாவாக இருக்கவேண்டியிருந்தது, ஏனென்றால் கிறிஸ்துவைக் கண்டுபிடிக்க முயன்று, அவன் “இரண்டு வயதுக்குட்பட்ட எல்லாப் பிள்ளைகளையும் கொலைசெய்தான்” என்று கூறும் வேதவாக்கியங்களை நாம் அறிந்திருக்கிறோம். அது அந்த நேரத்தில்தான் இருக்கவேண்டியிருந்தது. 10 மேலும், அந்த நேரத்தில், வரிவிதிப்பு ஒன்று ஏற்படவேண்டியிருந்தது. அது மரியாளையும் யோசேப்பையும், அவர்கள் பதிவுசெய்யப்பட்டிருந்த தங்கள் சொந்த ஊரான பெத்லகேமுக்குத் திரும்பிச் செல்லும்படி செய்யவேண்டியிருந்தது. வரிவிதிப்புக்காக, அவர்களுடைய பிறப்புகள் நீதிமன்றங்களின் பதிவுகளிலும் தேவாலயத்திலும் பதிவுசெய்யப்பட்டிருந்தன. கிறிஸ்து பெத்லகேமில் பிறக்கவேண்டியிருந்தது; இது நிகழ்ந்தபோது அவர்கள் அங்கிருந்து பல மைல்கள் தொலைவில் இருந்தார்கள். 11 அங்கே செல்வதற்காக அவர்கள் கடந்துசெல்லவேண்டியிருந்த ஆபத்துகளை நாம் கவனித்திருக்கிறோம். மரியாளை அங்கே அழைத்துச் செல்ல, பெரியதும் அருமையானதும் மெத்தைகளால் வசதியாக அமைக்கப்பட்டதுமான ஒரு ஆம்புலன்ஸ் அவர்களிடம் இருக்கவில்லை. இன்றைக்கு இருப்பதுபோல, ஏதாவது ஒரு சாக்குப்போக்கைச் சொல்லக்கூடிய நிலையும் அவர்களுக்கு இருக்கவில்லை. அது ராஜாவின் கட்டளை. எந்தச் சாக்குப்போக்கும் ஏற்றுக்கொள்ளப்படாது. அது நிறைவேற்றப்படவேண்டும். “ராஜா அப்படிச் சொல்லிவிட்டார்!” அவளுடைய நிலைமை எப்படியிருந்தாலும், அல்லது எதுவாயிருந்தாலும், அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பவேண்டும். குழந்தையை எதிர்பார்த்திருந்த அந்த இளம் தாய்க்கு எந்த வசதியும் இருக்கவில்லை. பயணம் செய்ய வேறு வழியும் இருக்கவில்லை; நடந்தோ, ஒரு சிறு கழுதையின் முதுகின்மீதோ மட்டுமே செல்ல முடியும். 12 எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கக்கூடிய நிலையில் இருந்த இந்தத் தாயாகிய மரியாளை யோசேப்பு அழைத்துக்கொண்டு, ஒரு சிறு கழுதையின் முதுகின்மேல் அமரவைத்தார் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. எப்போதாவது கழுதையின்மேல் சவாரி செய்த எவருக்கும், அது எவ்வளவு குலுக்கலான பயணம் என்பது தெரியும். யூதேயாவின் கீழ்ப்பகுதியிலிருந்து பெத்லகேமுக்கு வரும்போது, மலைகளின்மேல் வளைந்து செல்லும் ஒரு குறுகிய பாதையில் அந்தச் சிறு கழுதை வந்தது; அது மிகவும் கரடுமுரடான, மேடுபள்ளங்கள் நிறைந்த பாதை. அந்தச் சிறு கழுதை உறுதியாகக் கால்பதிக்காமல், குழந்தையை எதிர்பார்த்திருந்த இந்த இளம் தாயோடு கீழே விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும்? 13 அல்லது, தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்காக அவ்வளவு அதிகமான பயணம் நடந்துகொண்டிருந்த அந்த நாட்களில், நாடு முழுவதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது; சொந்த ஊர்களுக்குத் திரும்பும் யாத்திரிகர்களாலும் பயணிகளாலும் நிறைந்திருந்தது. அந்த நாட்களில் கொள்ளையர்களுக்கு அது மிகவும் சாதகமான ஒரு சூழ்நிலையாக இருந்தது. சிலரைக் கொண்ட சிறிய பயணக் கூட்டங்களை அவர்கள் கண்டபோது, குதிரையில் வந்தவர்கள், கொள்ளையர்கள், நேராக உள்ளே புகுந்து அவர்களைக் கொன்று, அவர்களுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு சென்றிருக்கலாம். திருமணமான இந்த இளம் தம்பதியர் எதிர்கொள்ளவேண்டியிருந்தது எப்படிப்பட்ட ஒரு காரியம்! அது எப்படியிருந்திருக்கும்! 14 மேலும், அவர்கள் கடந்துசெல்லவேண்டியிருந்த வனாந்தரங்களில் சிங்கங்களும், அழிவை ஏற்படுத்தும் அநேக காட்டு விலங்குகளும் சுற்றித்திரிந்தன. அவற்றில் ஏதாவது ஒரு காட்டு விலங்கு அந்தச் சிறு கூட்டத்தை நோக்கி வந்திருந்தால் என்னவாகியிருக்கும்? கையில் ஒரு குச்சியும், அசையக்கூட முடியாத நிலையிலிருந்த ஒரு மனைவியும் இருக்கும்போது, யோசேப்பால் என்ன செய்திருக்க முடியும்? அவர்கள் அதையும் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. 15 ஆனால், இதை அறிந்திருப்பது நமக்கு ஆறுதலை அளிக்கிறது: நம்முடைய முடிவை நாம் நம்முடைய கையில் வைத்திருக்கவில்லை. தேவன் நம்முடைய முடிவைத் தம்முடைய கையில் வைத்திருக்கிறார். அது அவ்விதமாக இருக்கவேண்டும் என்று அவர் நியமித்திருக்கிறார்; தேவனுடைய திட்டத்தில் எதுவுமே ஒருபோதும் குறுக்கிட முடியாது. நாம் நிச்சயமாகச் சென்றடைந்தே தீருவோம். 16 பயப்படுவதற்கு எதுவும் இருக்கவேண்டியதில்லை. ஆனாலும், மரியாளும் யோசேப்பும் சாதாரண மக்களாக, படிப்பறிவில்லாதவர்களாக இருந்திருக்கலாம். அந்த நேரத்திலேயே நிகழ்ந்துகொண்டிருந்த இந்தக் காரியங்கள் வேதவாக்கியங்களை நிறைவேற்றிக்கொண்டிருந்தன என்பதை அறிந்துகொள்ள அவர்களுக்கு வழி இருக்கவில்லை. 17 இன்றைக்கும் அதேவிதமாகத்தான் இருக்கிறது. நாம் வாழும் இந்த நாளிலேயே காரியங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன; தேவன் எப்படிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றி நம்மில் அநேகருக்கு ஒன்றுமே தெரியவில்லை. 18 இங்கே இந்த அறையிலிருக்கும், பதிவுசெய்யும் பெண்களில் ஒருவள், சுவற்றின்மேல் எழுதப்பட்ட கையெழுத்தையும், ஆகாயத்தில் உள்ள செயற்கைக்கோள் ஸ்புட்னிக்கையும் (Sputnik) பற்றிய பொருளின்மேல் நான் எப்போது பேசப்போகிறேன் என்று சற்றுமுன் என்னிடம் கேட்டாள். “அடுத்த ஞாயிற்றுக்கிழமையா?” நான், “எனக்குத் தெரியாது” என்றேன். 19 ஆனால், ஓ, நம்முடைய காலத்தை இருள் சூழ்ந்துகொண்டிருக்கும் இந்த வேளையிலும், தேவனுடைய மகத்தான கரம் தொடர்ந்து சீராக அசைந்துகொண்டிருப்பதைப் பாருங்கள். எதுவுமே அதைத் தடுக்காது. 20 இன்று நாம், அது அப்போது இருந்தபடியே, அந்தச் சிறு கழுதையும் இரண்டு பயணிகளும் இறுதியாக வந்து சேருவதைப் பார்க்கலாம். அவர்கள் இரவில் வனாந்தரங்களைக் கடந்து வந்தார்கள்; அவ்வளவு வெப்பமாக இருந்தது! பிறகு, அவர்கள் பெத்லகேமுக்குக் கிழக்கிலுள்ள அந்தச் சிறு மலையின்மேல் அமர்ந்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். 21 பெத்லகேம் ஒரு பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது; அங்கே ஒரு சிறு மலை இருக்கிறது. பெத்லகேமுக்குள் வரும் பாதை, பெத்லகேமுக்குக் கிழக்கில் வளைந்து, நகரத்திற்குள் கீழே செல்கிறது. மலையிலிருந்து கீழே இறங்கத் தொடங்குவதற்கு முன், கடைசி வளைவில் திரும்புகிற இடத்திற்கு அருகில், கூர்மையான பாறைகளின் ஒரு பெரிய குவியல் இருக்கிறது. அன்றிரவு நகரத்திற்குள் இறங்கிச் செல்வதற்கு முன்பு, மரியாளும் யோசேப்பும் கொஞ்சம் மூச்சுவாங்குவதற்காக ஒருவேளை அங்கே நின்றிருக்கலாம் என்று சரித்திர ஆசிரியர்கள் கருதியிருக்கிறார்கள். 22 யோசேப்பு தம்முடைய இளம் மணமகளை மென்மையாகக் கையாண்டு, கழுதையிலிருந்து தூக்கி, தரையில் இறங்க உதவுகிறார்; அவளை அழைத்துச் சென்று பாறையின்மேல் அமரவைத்து, “அன்பே, நமக்குச் சற்றுக் கீழே அந்தச் சிறு நகரம் இருக்கிறது. ஒருவேளை நம்முடைய சிறு புதிய வரவு அங்கே பிறக்கலாம்” என்று கூறுவதைப் பார்ப்போம். 23 அவர்கள் அமர்ந்து, தங்களுக்கு… கிழக்கிலுள்ள பெத்லகேமைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, நட்சத்திரங்கள் கொஞ்சம் மின்னி, இன்னும் பிரகாசமடைவதைப் பார்ப்பதாக என்னால் கற்பனைசெய்ய முடிகிறது. அவர்கள் அங்கே அமர்ந்து, நட்சத்திரங்களை உற்றுப் பார்த்து, ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கும்போது, அங்கிருந்து வெகு தூரத்தில், நூற்றுக்கணக்கான மைல்கள் கிழக்கே, மற்றொரு காட்சி உருவாகிக்கொண்டிருந்தது. 24 உங்களுக்குத் தெரியும், தேவன் தம்முடைய பிரபஞ்சத்தில் செயல்படுகிறார். ஒரு நாட்டில் காரியங்கள் நிகழும்படி செய்கிறார்; மற்றொரு நாட்டில் நிகழ்வதோடு அது பொருந்தும்படி அதை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அங்கே, வெகு தூரக் கிழக்கில், அநேக சரித்திர ஆசிரியர்கள் நமக்குச் சொல்லியிருக்கிறபடி, சாஸ்திரிகள் என்று நாம் அறிந்திருக்கும் இந்த மனிதர்களைப் பார்க்கிறோம். 25 இன்று அவர்கள் ஏறக்குறைய “வானியல் அறிஞர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்; குறிசொல்பவர்கள் என்ற அர்த்தத்தில் அல்ல. ஆனால், வானியலின் ஒரு போலியான வடிவம் இருக்கிறது; அது குறிசொல்பவர்கள் என்று அழைக்கப்படுகிறது. மக்கள் அந்தக் காரியங்களை நோக்கி ஓடுகிறார்கள்; அவை உண்மையான வானியல் அறிஞரைக் குறித்த ஒரு போலியான கருத்துருவாகவே இருக்கின்றன. 26 மகத்தான சரித்திர ஆசிரியரான ஹாம்ப்டன் நமக்குச் சொன்னார், அது… இந்த வானியல் அறிஞர்கள் மேதிய-பெர்சியர்களாக இருந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையைக் கொஞ்சம் பின்தொடர்ந்து பார்ப்போம். மேதிய-பெர்சியர்கள் பாபிலோனில் இருந்தபோது நம்முடைய கர்த்தரின் சுவிசேஷத்தை அறிந்துகொண்டார்கள் என்று நாம் காண்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்பு, நேபுகாத்நேச்சார் ராஜாவின் காலத்தில், நட்சத்திரங்களையும் வானமண்டலங்களையும் கவனித்துக்கொண்டிருந்த வானியல் அறிஞர்களைப் போன்றவர்கள் அவர்களிடம் இருந்தார்கள். அடையாளங்களையும் நட்சத்திரங்களின் அசைவுகளையும் வைத்து, குறிப்பிட்ட சில நிகழ்வுகள் நடக்கப்போகின்றன என்பதை அவர்களால் சொல்ல முடிந்தது. 27 ஆரம்ப காலத்து ராஜாக்கள், நிகழ்வுகளையும் நடக்கப்போகும் காரியங்களையும் அறிந்துகொள்வதற்காக இப்படிப்பட்ட மனிதர்களிடம் ஆலோசனை கேட்டார்கள். தேவன் அதை பூமிக்குத் தெரியப்படுத்துவதற்கு முன்பு, எப்போதும் தம்முடைய வானமண்டலங்களின் மூலமாக அறிவிக்கிறார். தேவன் அதை வானங்களில் எழுதுகிறார். 28 நாம் பார்க்கும் நட்சத்திரங்களை, வானங்களிலுள்ள சிறிய ஐந்து முனைகள் கொண்ட உருவங்களாக நாம் நினைக்கிறோம். ஆனால், அவை என்னவென்றால், இந்த உலகத்தைவிட மிகப் பெரிய உலகங்களாக, சூரிய ஒளியைப் பிரதிபலித்துக்கொண்டிருக்கின்றன. 29 கல்தேயர்களின் தேசத்தில் இஸ்ரவேலர் எழுபது ஆண்டுகள் சிறைப்பட்டிருந்த காலத்தில், இந்த மக்கள் நிச்சயமாகச் சுவிசேஷத்தை அறிந்துகொண்டார்கள்; நிச்சயமாக, தானியேல் சாஸ்திரிகளின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தான். காரியங்களின் முடிவை அறிந்துகொள்ளவும், தேவன் என்ன செய்யப்போகிறார் என்பதை அறிந்துகொள்ளவும் அந்தத் தீர்க்கதரிசிக்கு இருந்த மகத்தான ஞானத்தினால், அவன் சாஸ்திரிகளின் தலைவன் என்று அழைக்கப்பட்டான். சாஸ்திரிகள் தங்களுடைய பண்டைய முன்னோர்களின் பழைய கையெழுத்துப் பிரதிகளை வைத்திருந்தார்கள்; அவற்றைப் பார்த்து அறிந்துகொண்டார்கள். தானியேல் கர்த்தருடைய வார்த்தைகளை அவற்றுக்குள் கொண்டுவருகிறான். 30 ஆகவே, இந்தக் காலத்தில் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அதிகமாக ஆலோசித்திருந்தார்கள் என்பதையும், எந்த வானியல் அறிஞரையோ சாஸ்திரியையோ காட்டிலும் மிக மேலான ஞானத்தையும் வல்லமையையும் அந்த ஒரே மெய்யான தேவன் வெளிப்படுத்தியதை அவர்கள் கண்டிருந்தார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்கிறோம். நேபுகாத்நேச்சார் ராஜாவின்… அல்லது பெல்தெஷாத்சாரின் நடனம் நடந்த இரவில் அது நிரூபிக்கப்பட்டது; கல்தேயர்களில் எவராலும், வானியல் அறிஞர்களில் எவராலும் சுவரிலிருந்த கையெழுத்தை வாசிக்க முடியவில்லை. ஆனால் தானியேலால், ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும் வல்லமையினாலும், அதைச் செய்ய முடிந்தது. அவருடைய எழுத்துகள் புனிதமாகப் பாதுகாக்கப்பட்டன; இன்றுவரையும் அப்படியே இருக்கின்றன. 31 இப்போது, கிழக்கில் நாம் அவர்களை… இந்தியாவில் அவர்களோடு பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. இப்போது அவர்கள் முகம்மதியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் மேதிய-பெர்சியர்களாக இருந்தார்கள். இந்தியர்கள்… அவர்களை அசுத்தமானவர்கள் என்று அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மேதிய-பெர்சியர்கள்தான் உண்மையில் முகம்மதியர்கள். அவர்கள்தான் ஆரம்பத்தில் நேபுகாத்நேச்சார் ராஜாவோடு இருந்தவர்கள். அவர்களுடைய மகத்தான ஞானிகள், நிகழப்போகும் ஆவிக்குரிய காரியங்களை அறிவிப்பதற்காக இயற்கையான—இயற்கையான காரியங்களை ஆராய்ந்த அறிஞர்களாக இருந்தார்கள். 32 ஆகவே, இந்த நீண்ட நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, தானியேலுடைய போதனைகளின் கையெழுத்துப் பிரதிகளையும், மற்றவற்றையும் அவர்கள் பாதுகாத்து வைத்திருந்தார்கள். 33 அவர்கள் என்ன செய்வார்களென்றால், மாலைப்பொழுதின் ஆரம்ப வேளையில், Assay[?] மலைகளின்மேல் ஏறிச் செல்வார்கள். அங்கே மேலே அவர்களுக்கு ஒரு கோட்டை இருந்தது. அந்தக் கோட்டையில் சாஸ்திரிகளின் கோட்டை இருந்தது. அவர்கள் தங்களுடைய Fujadous[?] விருந்தைக் கொண்டாடுவார்கள். விருந்துக்குப் பிறகு, விதானங்களின்மீதோ, மொட்டைமாடியின்மீதோ நடந்து சென்று, சூரியன் மறைந்த பிறகு அங்கிருந்த ஏதாவது ஒரு கண்காணிப்புக் கோபுரத்திற்குச் செல்வார்கள். முகம்மதியர்கள் வழக்கமாகச் செய்வதுபோல, சூரியனை நோக்கிப் பணிந்து, “அல்லாஹ்! அல்லாஹ்!” என்று உரக்கக் கூப்பிடுவார்கள். அநேகமுறை புனித நீரினால் தங்களை ஆசீர்வதித்துக்கொள்வார்கள்; இப்படிப்பட்டவற்றை இன்றுவரையும்கூட செய்கிறார்கள். பெரும்பாலும், அவர்களுடைய மிகவும் புனிதமான காரியமாக இருந்தது அக்கினிதான். இந்த ஒரே மெய்யான தேவன் அக்கினியில் வாசமாயிருக்கிறார் என்று அவர்கள் நம்பினார்கள். 34 அந்த ஒரே மெய்யான, ஜீவனுள்ள தேவன் ஒளியில் வாசமாயிருக்கிறார் என்பதையும், அவர் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறார் என்பதையும் அறிந்துகொள்வது எவ்வளவு வியப்பாயிருக்கிறது! 35 அந்தப் புனித அக்கினிகளை அவர்கள் எப்படி எரியவைத்தார்கள்! இந்த அக்கினியில் அந்த ஒரே மெய்யான தேவன் வாசமாயிருக்கிறார் என்றும், அதில் அவர் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார் என்றும் நம்பியதால், அவர்கள் இந்த அக்கினியைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். சூரியனுடைய—சூரியனுடைய வெளிச்சம் மறைந்தபோது, அந்த அக்கினி மிகவும் பிரகாசமாக எரிந்தது. 36 ஆகவே, அவர்கள் இந்தக் கண்காணிப்புக் கோபுரத்திற்குச் சென்று, மேலே நோக்கிப் பார்ப்பார்கள். அவர்கள் நன்றாகப் பயிற்சிபெற்றிருந்தார்கள். நட்சத்திரங்களைக் கொண்ட அந்த மகத்தான வானமண்டலத்தின் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். எந்த அசைவையும் காணும்படி அவர்கள் மிகுந்த கவனத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். 37 ஓ, கிறிஸ்தவர்கள் மட்டும் அப்படிச் செய்வார்களானால்! நட்சத்திரங்களைக் கவனிப்பதல்ல, தேவனுடைய வார்த்தை வெளிப்பட்டுக்கொண்டிருக்கும்போது அதைக் கவனிப்பது. இன்று நாம் மட்டும் அதைக் கவனித்து, நாம் இவ்வளவு துணிவோடு ஆதரித்து நிற்கிற காரியங்களை இந்த நாளில் செய்வதாக தேவன் எப்படி வாக்குப்பண்ணியிருக்கிறார் என்பதைப் பார்ப்போமானால்! வியாதியஸ்தர்களைக் குணமாக்குவது, மகத்தான அற்புதங்களைச் செய்வது போன்ற இந்தக் காரியங்களைச் செய்வதாக தேவன் வாக்குப்பண்ணியிருக்கிறார். 38 நிகழ்வுகளைப் பற்றி அவர்களுக்குப் போதித்த அதே தானியேல், “கடைசி நாட்களில் தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள்” என்று கூறினார். அந்த வேதவாக்கியங்கள் நிறைவேறவேண்டும். நாம் மட்டும் ஆராய்ந்து தேடுவோமானால்! நீங்கள் கவனிப்பீர்களானால், தம்மைத் தேடுகிறவர்களுக்கும், தம்மைக் காண வாஞ்சிக்கிறவர்களுக்கும் மட்டுமே தேவன் தம்மை வெளிப்படுத்துகிறார். “என்னிடத்தில் சேருங்கள், அப்பொழுது நான் உங்களிடத்தில் சேருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். சில நேரங்களில், நாம் அவரிடத்தில் சேரும்படியாக தேவன் காரியங்கள் நிகழ அனுமதிக்கிறார். ஏனென்றால், குறிப்பிட்ட சில நிகழ்வுகள் நடைபெறவேண்டும் என்று தேவன் நிச்சயமாக நியமித்திருக்கிறார்; அவருடைய மகத்தான காலக் கடிகாரம் ஒவ்வொன்றிற்குமான நேரத்தைக் குறிக்கிறபடியே அவை வெளிப்படும். 39 ஒரு குறிப்பிட்ட இரவில் என்று வைத்துக்கொள்வோம், விருந்து முடிந்து, மறையும் சூரியனை நோக்கி அவர்கள் பணிந்த பிறகு, நம்முடைய குழுவினர் இந்தக் கண்காணிப்புக் கோபுரத்திற்குள் ஏறிச் செல்கிறார்கள். மகத்தான வானமண்டலங்கள் வானத்தில் தெரியத் தொடங்கும்போது, வெகு காலத்திற்கு முன்பிருந்த ஞானிகளுடைய பழைய கையெழுத்துப் பிரதிகள் வெளியே கொண்டுவரப்பட்டன. அவை விரிக்கப்பட்டன; அவர்கள் அவற்றைப் பார்த்து, ஓ, முன்னுரைக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட சில காரியங்களைப் பற்றிப் பேசினார்கள். ராஜ்யங்களின் பெரிய வீழ்ச்சியையும், அவர்களுடைய மகத்தான சாம்ராஜ்யங்களின் சரிவையும், மக்களின் சமூக நிலைகளையும், பூமியைக் கிழித்து, அவர்களுடைய தோழர்களின் இரத்தத்தால் அதைக் குளிப்பாட்டிய போர்களையும் பற்றிய பேச்சு ஒருவேளை நீண்ட நேரம் தொடர்ந்திருக்கலாம். ஆவிக்குரிய மனிதர்கள் ஆவிக்குரிய காரியங்களை மட்டுமே புரிந்துகொள்கிறார்கள்; கடந்துபோன மகத்தான நாட்களும், அவர்களுடைய அவமானமும் எப்படி வெளிப்பட்டன என்பதைப் பற்றி; அந்த ஒரே மெய்யான, ஜீவனுள்ள தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தும்படி, புனித அக்கினி நாவுகளைப்போல மேலே எழுந்து, காற்றில் மறைந்துகொண்டிருந்தது. 40 இரவு அதன் நடுப்பகுதியை நோக்கிக் கடந்துசெல்லும்போது, பத்து மணி அல்லது பதினொரு மணி என்று வைத்துக்கொள்வோம், அந்தக் கூட்டத்தினர் அங்கே அமர்ந்து, ஒருவேளை தங்களுடைய துதிப்பாடல்களைப் பாடிக்கொண்டிருந்திருக்கலாம், அல்லது ஒருவேளை ஜெபித்துக்கொண்டிருந்திருக்கலாம். அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பது நமக்குத் துல்லியமாகத் தெரியாது; சரித்திர ஆசிரியர்களும் அதைத் தெளிவாகக் கூறவில்லை. ஆனாலும், அவர்கள் ஆவிக்குரிய மனநிலையில் இருந்திருக்கவேண்டும், ஏனென்றால் ஐக்கியமும் ஆவியும் இருக்கிற இடத்தில் தேவன் ஆராதிக்கப்படுகிறார். 41 இன்று காலையில் தேவன் நம்மிடத்தில் வருவார். அவருடைய வார்த்தையோடும் அவரோடும் நாம் மட்டும் ஆவிக்குரிய ஐக்கியத்திற்குள் வரமுடியுமானால், இந்த அன்பான சிறு பெண்ணின் உயிரையும், இங்கே ஒருவேளை புற்றுநோயாலும் மற்ற வியாதிகளாலும் மரணமடைந்துகொண்டிருக்கும் உங்களில் அநேகருடைய உயிரையும் அவர் காப்பாற்றுவார். தேவன் தம்மை வெளிப்படுத்துவார். அவர் எப்போதும் அப்படிச் செய்கிறார். 42 உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, எம்மாவுக்குச் செல்லும் பாதையில், தியோப்பிலுவும் அவருடைய நண்பரும் அவரோடு பேசத் தொடங்கி, வேதவாக்கியங்கள் மேற்கோளாகச் சொல்லப்பட்டபோதுதான், கிறிஸ்துவிலிருந்த தேவன் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். பிறகு, திரும்பிச் செல்லும் பாதையில் அவர்கள், “வழியிலே நாம் அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?” என்று சொன்னார்கள். வார்த்தையைப் பற்றிப் பேசுவதில் ஏதோ ஒன்று இருக்கிறது! 43 மரித்துப்போன பல்வேறு சாஸ்திரிகளைப் பற்றி அவர்கள் தங்களுடைய பழைய கையெழுத்துப் பிரதிகளில் வாசித்தபோது. இந்த நேரத்தில் அவர்களுடைய வேதநூலின் பெயரை என்னால் உச்சரிக்க முடியவில்லை; அல்லது அதை Zedakoah[?] என்று அழைத்தார்கள், அந்தவிதமாக ஏதோ ஒன்று. அதை அவர்கள் வாசித்து, தங்களுடைய புனித மனிதர்களின் இந்த எழுத்துகளைத் திரும்பிப் பார்த்தார்கள். அவர்களில் அநேகர் விக்கிரகாராதனைக்காரர்களாக இருந்து, மக்களுக்கு அவமானத்தையும் இழிவையும் கொண்டுவந்ததைப் பார்த்தபோது, இந்தச் சாஸ்திரிகள் அவமானத்தால் தங்கள் தலைகளைக் குனிந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், அப்போது எரிந்துகொண்டிருந்த புனித அக்கினிகள் ஒரு மெய்யான தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தின. 44 பிறகு, கையில் ஒரு சுருளோடு ஒருவர் கோட்டையிலிருந்து வருவதை என்னால் பார்க்க முடிகிறது. கண்காணிப்புக் கோபுரத்தின்மேல் அமர்ந்து நட்சத்திரங்களைக் கவனித்துக்கொண்டிருந்த ஞானிகளிடம் அவர் அதை அளிக்கிறார். தேவன் நியமித்தபடியே, ஒவ்வோர் இரவும் நடந்ததுபோல, எல்லாமே பூரணமான ஒத்திசைவோடு இயங்கிக்கொண்டிருந்தன. 45 இங்கே, ராஜ்யங்கள் வீழ்வதைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, தானியேலின் ஒரு பகுதியை வாசிக்கிறார்கள். அது, “கைகளால் பெயர்க்கப்படாமல் ஒரு கல் மலையிலிருந்து பெயர்ந்துவரும்வரை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்; அது பூமியின் ராஜ்யங்களை மோதியது; அவை போரடிக்கிற களத்திலுள்ள பதரைப்போல—பதரைப்போலாயின. இந்தப் பெரிய கல் ஒரு பர்வதமாக எழும்பி, பூமியையெல்லாம் நிரப்பிற்று. அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யமாயிருக்கும்” என்று கூறியது. அப்போது, சாம்ராஜ்யங்கள் இனி வீழாத, ராஜ்யங்கள் இனி அழிக்கப்படாத ஒரு காலத்தை நோக்கி அவர்களுடைய நம்பிக்கைகள் தூண்டப்பட்டன; ஏனென்றால் அந்த ஒரே மெய்யான, ஜீவனுள்ள தேவனால் நியமிக்கப்பட்ட ஒரு நித்திய ராஜ்யம் வரவிருந்தது. 46 இந்தக் காரியங்களையும் வேதவாக்கியங்களையும் பற்றி அவர்கள் சிந்தித்துக்கொண்டிருந்தபோது, ஒருவர் மேலே நோக்கிப் பார்த்திருக்கவேண்டும். அவர்களுக்கிடையே ஒரு அந்நியன் இருந்தான். இதற்கு முன்பு அவர்கள் ஒருபோதும் பார்த்திராத ஒரு ஒளியைக் கண்டார்கள். அது கம்பீரமான ஒரு நட்சத்திரமாக இருந்தது; இந்த நேரம்வரை அது அந்தத் தொகுதியில் இருந்ததில்லை, அல்லது சாஸ்திரிகளின் கண்களுக்குத் தென்பட்டதில்லை. ஆனால், அங்கே அது இருந்தது. ஏன்? வேதவாக்கியங்கள் நிறைவேறவேண்டும். 47 அப்போது நீங்கள், “சகோதரன் பிரன்ஹாமே, தேவன் அந்தச் சாஸ்திரிகளோடு செயல்படுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்கிறீர்கள். 48 எபிரெயர் 1-ஆம் அதிகாரம், 1-ஆம் வசனத்தில், “தேவன் பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும்,” எல்லாவிதமான முறைகளிலும், “பிதாக்களுக்குத் திருவுளம்பற்றினார்” என்று வேதாகமம் கூறுகிறது. 49 அப்போஸ்தலர் 10:35-லும், “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல; எந்த ஜனத்திலாயினும் நீதியோடு அவரைச் சேவிக்க விரும்புகிறவர்களை அவர் கனப்படுத்துகிறார்” என்று எழுதப்பட்டிருக்கிறது. நீங்கள் தவறில் இருந்தாலும், தேவனைச் சேவிக்க விரும்புகிற உங்கள் இருதயத்தின்—இருதயத்தின் நோக்கத்திலுள்ள நீதியை தேவன் கனப்படுத்துவார். ஆகவே, தேவனை ஒரு குறிப்பிட்ட விசுவாசப் பிரமாணத்திற்குள் நிறுத்திவைக்கக்கூடிய எல்லைக்கோடுகளை ஸ்தாபனங்கள் அமைக்க முடியாது; ஏனென்றால் தேவன் மனித இருதயத்தின் நோக்கங்களைப் பார்ப்பார்; அங்கே அந்த இடத்திலிருந்து அவர் செயல்படுவார். 50 இந்தச் சாஸ்திரிகள் தங்கள் இருதயத்தில் நேர்மையுள்ளவர்களாகவும், அந்த ஒரே மெய்யான தேவனைக் காண விரும்புகிறவர்களாகவும், அவருடைய தீர்க்கதரிசனம் நிறைவேறுவதை எதிர்பார்க்கிறவர்களாகவும் இருந்தார்கள் என்று நாம் காண்கிறோம். அந்தத் தீர்க்கதரிசனம், “கர்த்தர் அவரை எழும்பப்பண்ணி, ஒரு… அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது. அது நித்திய ராஜ்யமாயிருக்கும்” என்று கூறியது. 51 அந்த நேரத்தில்தான், இன்று நாம் நட்சத்திரம் என்று அழைக்கப்படுவதாக அறிந்திருக்கும் அந்த நட்சத்திரம் வானத்தில் தோன்றியது. சூரிய மண்டலத்தின் விதிகளை மீறி, மகத்தான வானமண்டலங்களின் நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து வந்து, ஏதோ ஒன்று நிகழப்போகும்போது அதை அறிவித்த அந்த நட்சத்திரத்தின் அற்புதமான தோற்றத்தைப் பார்த்தபடி, அந்தச் சாஸ்திரிகள் ஒருமனதோடு பேச்சற்றவர்களாக நின்றதை என்னால் கற்பனைசெய்ய முடிகிறது. 52 இந்த இடத்தில், சொல்லப்படாத உள்ளர்த்தத்தையும் நீங்கள் உணர்ந்து, நாம் என்ன குறிப்பிடுகிறோம் என்பதை அறிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன். இந்த நாளில் தேவன் எல்லாவற்றையும் மீறி, தம்மை அறிவித்திருக்கிறார்; அவர் இன்று உயிரோடிருக்கிறார், தம்முடைய மகத்தான வானத்துக்குரிய சரீரத்தில் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருக்கிறார். இங்கேயுள்ள அவருடைய உருவத்தின் படம், உலகிலுள்ள ஒவ்வொரு அவிசுவாசிக்கும் சவாலாக இருக்கும். அவர் என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறார். தேவன் தம்முடைய சொந்த விதத்தில், வழக்கத்திற்கு மாறாகக் காரியங்களைச் செய்கிறார். 53 ஆனால், அவர்கள் வானத்து ஒளிகளைக் கவனித்திருந்தார்கள்; இந்த ஒளியோ மற்ற எல்லா ஒளிகளிலிருந்தும் வித்தியாசமானதாகத் தோன்றியது. 54 இன்று, சபையிலுள்ள ஒளிகளை நாம் கவனித்திருக்கிறோம். மெதடிஸ்ட், பாப்டிஸ்ட், பெந்தெகொஸ்தே, பிரெஸ்பிடேரியன் ஒளிகளை நாம் கவனித்திருக்கிறோம். 55 ஆனால், அவரை எதிர்பார்க்கிறவர்களுக்கு, அவரை அறிவிக்கிற ஒரு வித்தியாசமான ஒளி பிரகாசிக்கத் தொடங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” அவருடைய மகத்தான, அற்புதமான அழகிலும் வல்லமையிலும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை அறிவிப்பதற்காக, இந்தக் கடைசி நாட்களில் சபைக்கு பரிசுத்த ஆவியின் வடிவத்தில் அனுப்பப்பட்டிருக்கிற வானத்துக்குரிய சரீரத்தில்; இப்போது தம்முடைய விசுவாசிகளின் நடுவில் இருக்கிற அவர் என்றென்றைக்கும் நித்திய ஒளியாயிருக்கிறார். ஓ, அவர் செய்கிறவற்றைப் பார்ப்பது எவ்வளவு அற்புதமாயிருக்கிறது! 56 அங்கே அவர்கள் பிரமித்துப்போய் நின்றபோது, ஒருவரால் மற்றவரிடம் பேச முடியவில்லை; ஏனென்றால் இந்த ஒளியின் மகிமை அவர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியிருந்தது. 57 ஓ, பெலவீனத்தால் தளர்ந்துபோயிருக்கும் என் பரிதாபமான நண்பரே, இன்று அது எப்படியிருக்கிறது! புதிய ஒளியையும் புதிய நம்பிக்கையையும் அளிக்கிற அவருடைய வல்லமையை ஒருபோதும் அறிந்திராத ஒரு மனிதன், அவருடைய கம்பீரத்தினால் தன்னைப் பிரமிப்பில் ஆழ்த்துகிற விசுவாசத்தோடு, கிறிஸ்து என்னும் தெய்வீக நபருடைய பிரசன்னத்திற்குள் நடந்துசெல்லும்போது. அது பலிபீடத்திற்கு நடந்து சென்று, ஊழியக்காரரிடம் உங்கள் வலது கையைக் கொடுப்பதுபோல அல்ல; ஞானஸ்நானம் பெறுவதற்காகத் தண்ணீர்த் தொட்டிக்குள் செல்வதுபோலவும் அல்ல; தெளிக்கப்படுவதற்காக ஒரு சிப்பியோடு நிற்பதுபோலவும் அல்ல. அது, இதற்கு முன்பு நீங்கள் ஒருபோதும் கண்டிராத ஒரு ஒளிக்குள் நடந்துசெல்வதாகும். தேவனுடைய வார்த்தைக்கு முரணான எதையும் இல்லாததுபோலக் கருதுகிற தெய்வீக விசுவாசத்தின் நங்கூரமாயிருக்கிறது அது. அது புதிய ஜீவனை அளிக்கிறது. மரித்துக்கொண்டிருப்பவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. பெலவீனர்களுக்குத் தைரியத்தை அளிக்கிறது. வியாதியஸ்தர்களுக்குச் சுகத்தை அளிக்கிறது. தயவு கிடைக்காதவர்களுக்கு ஆசீர்வாதங்களை அளிக்கிறது. அவருடைய பிரசன்னத்தின் ஒளிக்குள் அடியெடுத்து வைப்பது எவ்வளவு அற்புதமாயிருக்கிறது! ஒரு கட்டுக்கதை அல்ல. யாரோ ஒருவர் தங்களுடைய மனதில் வெறுமனே மாம்சப்பிரகாரமாக உருவாக்கிய ஏதோ ஒன்றுமல்ல. ஆனால், மகிமையின் ராஜாவுடைய பிரசன்னத்திற்குள், ஜீவனுள்ள தேவனுடைய நித்திய ஒளிக்குள் நேரடியாக வருவதாகும். 58 ஏதோ ஒன்று நிகழ்ந்து, அந்த நம்பிக்கையை உங்களுக்குள் நங்கூரமிட்டு நிலைநிறுத்தும்போது, அதற்குப் பிறகு நீங்கள் எவ்வளவு வியாதிப்பட்டாலும், அதற்கு முரணான எதைக்கொண்டும் உங்களைச் சோதிக்கப் பிசாசு முயற்சிப்பதில் முற்றிலும் எந்தப் பயனும் இல்லை. அது என்றென்றைக்கும் நங்கூரமிட்டு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. தவறான வாழ்க்கையை வாழ முயற்சிக்கும்படி சத்துரு உங்களை எவ்வளவுதான் தூண்டினாலும், நீங்கள் என்றென்றைக்கும் நங்கூரமிட்டு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறீர்கள்; ஏனென்றால் அவருடைய பிரசன்னத்திற்குள், உங்கள் உள்ளத்தின் ஆழமான தன்மையை மாற்றி, உங்கள் இருதயத்தில் இரட்சிப்பின் ஆனந்த துதி ஒலிக்கவைத்திருக்கிற ஒரு தெய்வீக ஒளிக்குள் நீங்கள் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள். அதைப் பற்றி உலகத்திற்கு ஒன்றுமே தெரியாது; நீங்கள் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறீர்கள். மரணமும் அதனுடைய நிழல்களும் உங்களைவிட்டு ஓடிப்போய்விட்டன; இந்தத் தெய்வீக ஒளிக்குள் நீங்கள் அடியெடுத்து வைக்கும்போது, ஒரு புதிய சிருஷ்டியாக ஆகியிருக்கிறீர்கள். 59 அந்தச் சாஸ்திரிகள் அந்த ஒளியைப் பார்த்துக்கொண்டு, பிரமித்துப்போய் நின்றபோது, கடைசியாக ஒருவர் மற்றவரிடம், “ஓ, ஏதோ ஒன்று நிகழப்போகிறது என்பதற்கு இது ஒரு அற்புதமான அடையாளமாக இருக்கிறதல்லவா!” என்று சொல்வதை என்னால் கேட்க முடிகிறது. 60 உண்மையாகவே, இன்றும் நாம் கர்த்தராகிய இயேசுவின் பிரசன்னத்திற்குள் வரும்போது, ஏதோ ஒன்று நிகழப்போகிறது என்பதற்கு அது ஒரு தெய்வீக அடையாளமாயிருக்கிறது; அவருடைய மகிமையான இரண்டாம் வருகை சமீபமாயிருக்கிறது. 61. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு... ஒருவேளை அவர்கள் இரவு முழுவதும் அந்த ஒளியைக் கவனித்துக்கொண்டிருந்திருக்கலாம். அது எவ்வளவாய் பிரகாசித்தது! மற்ற நட்சத்திரங்களைவிட அது அதிகப் பிரகாசமுள்ளதாய்த் தோன்றியது. வேறு எந்த நட்சத்திரத்தையும் பார்ப்பதற்காகத் தங்கள் கண்களை அதைவிட்டு விலக்க முடியாதவர்களாக அவர்கள் இருந்ததுபோல் தோன்றியது. 62. அந்த மகத்தான நித்திய ஒளி நம்முடைய முகங்களில் பிரகாசிப்பதை நாம் கண்டால், நிச்சயமாக நாம் நம்முடைய ஸ்தாபனப் பிரிவுகளை நோக்கி, “நாங்கள் பாப்டிஸ்டுகள், அல்லது நாங்கள் பிரஸ்பிடேரியன்கள், அல்லது நாங்கள் பெந்தெகொஸ்தேயினர்” என்றோ, அல்லது அது வேறு எதுவாக இருந்தாலும் சரி, அப்படிச் சொல்லிக்கொண்டிருக்க மாட்டோம் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். நாம் அந்த ஒளியை மட்டுமே நோக்கி, ஜீவிப்போம். அவரே நித்திய ஒளியாயிருக்கிறார். 63. அவர்கள் அந்த ஒளியைக் கவனித்துக்கொண்டிருந்தபோது, கடைசியாகச் சூரியன் உதித்தது... பகல் நேரத்தில் அவர்கள் தூங்குவார்கள். இந்தியாவில் அவர்கள் தெருக்களில் தங்கள் கால்களை மடக்கிக் குறுக்காக வைத்துக்கொண்டு, தலைகளை ஒன்றாகச் சேர்த்தவாறு அமர்ந்திருப்பதை நான் கவனித்திருக்கிறேன். அவர்கள் பகல் நேரத்தில் தூங்கிவிட்டு, இரவு நேரத்தில் நட்சத்திரங்களைக் கவனிப்பதற்குச் செல்வார்கள். ஏதாவது அசைவு ஏற்படுகிறதா என்று கவனித்துக்கொண்டிருப்பார்கள். 64. அவரைத் தேடுகிறவர்கள் மட்டுமே அவரைக் காண்பார்கள். அவரை விசுவாசிக்கிறவர்கள் மட்டுமே அவருடைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள். சுகமளித்தலை விசுவாசிக்கிறவர்கள் மட்டுமே சுகமளித்தலைப் பெற்றுக்கொள்வார்கள். இரட்சிப்பை விசுவாசிக்கிறவர்கள் மட்டுமே அதைப் பெற்றுக்கொள்வார்கள். விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும். ஆனால், முதலாவதாக, அது வெறுமனே மாம்ச சிந்தனையினால் உருவாக்கப்பட்ட ஒரு கருத்தாக இருக்கக்கூடாது. அது தேவனிடமிருந்து மட்டுமே நேரடியாக அனுப்பப்பட்ட ஒரு வெளிப்பாடாக இருக்க வேண்டும். நாம் கவனித்துக்கொண்டிருக்கும்போது... 65. இரவுக்குப் பின் இரவாக அவர்கள் அந்த ஒளியைக் கவனித்துக்கொண்டிருந்ததை நாம் காண்கிறோம். அதைக் குறித்துக் கலந்துரையாடினார்கள். வேதவாக்கியங்களை எடுத்துப் பார்த்து, ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒருவர் வந்து, “இதோ, எபிரெய மொழியில் எழுதப்பட்ட மற்றொரு வேதவாக்கியம் இருக்கிறது. இது அவர்களுடைய தீர்க்கதரிசிகளில் ஒருவரான பிலேயாம் என்பவரிடமிருந்து வந்திருக்கிறது. அவர், ‘ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும்’ என்று கூறியிருக்கிறார்” என்று சொல்வதை என்னால் காண முடிகிறது. வேதவாக்கியங்கள் நிறைவேறிக்கொண்டிருப்பதை அவர்கள் கண்டார்கள். ஓ, அவர்களுடைய இருதயங்கள் எவ்வளவாய் சந்தோஷப்பட்டன! 66. இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்தப் பொல்லாத நாளில், தேவனுடைய பரிசுத்த வேதவாக்கியங்கள் நிறைவேறுவதையும், நம்முடைய முழு உள்ளத்தின்மீதும் பிரகாசிக்கிற ஒரு மகத்தான தேடும் ஒளியாக அவை நமக்கு வெளிப்படுத்தப்படுவதையும் காண்பது, நம்முடைய இருதயங்களை எவ்வளவாய் சந்தோஷப்படச் செய்ய வேண்டும்! 67. அதன் பிறகு, சிறிது காலம் அவர்கள் அந்த ஒளியைக் கவனித்துக்கொண்டிருந்தபோது, ஒரு இரவில் விசித்திரமான விதத்தில் அது நகரத் தொடங்கியது. நாம் எப்போதும் ஒளியோடுகூடவே நகருகிறோம். அந்த ஒளி மேற்குத் திசையை நோக்கி நகரத் தொடங்கியது. உடனே அவர்கள் தங்கள் ஒட்டகங்களையும், அரசருக்குரிய தங்கள் உடைமைகள் அனைத்தையும் பயணத்திற்காக ஆயத்தப்படுத்தினார்கள். காணிக்கைகளையும் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் அந்த ஒளியைப் பின்பற்றி தங்கள் பயணத்தைத் தொடங்குவதை என்னால் காண முடிகிறது. ஏனென்றால், அது ஒரு பரலோகத்திற்குரிய ஜீவன் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அது இன்னும் மகத்தான ஒரு ஒளியைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். 68. நண்பரே, இன்றைக்கும் அது அவ்வாறே இருக்கிறது. ஒரு நட்சத்திரம் பிரகாசிப்பதை நாம் காணும்போது, அது சூரியனுடைய ஒளியின் பிரதிபலிப்பு என்பதை அறிந்திருக்கிறோம். சந்திரன் பிரகாசிப்பதைக் காணும்போது, அது அதைவிட மகத்தான ஒரு ஒளியின் பிரதிபலிப்பு என்பதை அறிந்திருக்கிறோம். 69. சபை பிரகாசிப்பதை நாம் காணும்போது, அது அழிவில்லாத நித்திய ஒளியாகிய அதைவிட மகத்தான ஒரு ஒளியின் பிரதிபலிப்பு என்பதை அறிந்திருக்கிறோம். ஆனால், நாம் நம்மை இருளாக்கிக்கொண்டு, நம்முடைய இருதயங்களையும் விசுவாசத்தையும் அதைவிட்டு விலக்கி, “அற்புதங்களின் நாட்கள் கடந்துபோய்விட்டன; இனிமேல் இப்படிப்பட்ட காரியங்கள் எதுவும் கிடையாது” என்று சொல்லும்போது, தேவனுடைய நித்திய ஒளிக்கு நம்முடைய முதுகைக் காட்டிக்கொண்டிருக்கிறோம். 70. அவர்கள் தொடர்ந்து பயணம் செய்தபோது, மலைகளை விட்டுப் புறப்பட்டு மேற்குப் பக்கத்திலுள்ள மலைச்சரிவுகளை நோக்கிச் சென்றதை என்னால் காண முடிகிறது. அந்தச் சரிவுகளின் வழியாகக் கீழே இறங்கி, டைக்ரிஸ் (Tigris) நதியை அடைந்தார்கள். அங்கிருந்து வலிமைமிக்க டைக்ரிஸ் நதியைப் பின்தொடர்ந்து, பாபிலோனுக்கு வந்து சேர்ந்தார்கள். ஐபிராத்து நதியிலுள்ள ஆற்றைக் கடக்கும் இடத்தைக் கடந்து, தொடர்ந்து பயணம் செய்து, பாலஸ்தீன தேசத்தின் எல்லையோரமாகச் சென்றார்கள். சந்தோஷப்பட்டுக்கொண்டே சென்றார்கள்! அவர்கள் இரவு நேரங்களில் பயணம் செய்தார்கள். ஏனென்றால், பாலைவனங்களின் வழியாகப் பயணம் செய்வதற்கு இரவு நேரம் குளிர்ச்சியாக இருந்தது. மற்றொரு காரணம் என்னவென்றால், இருளில்தான் நட்சத்திரங்கள் பிரகாசித்தன. ஆகவே, அவர்கள் அந்த ஒளியைப் பின்தொடர வேண்டியிருந்தது. அந்த ஒளியே அவர்களுடைய வழிகாட்டியாக இருந்தது. 71. அவர்கள் தொடர்ந்து வந்தபோது, கடைசியாக அந்த ஒளி எருசலேமுக்கு வந்தது. ஆனால், அது எருசலேமை அடைந்தவுடன் மறைந்துபோனது. அவர்கள் எருசலேமை அடைந்தபோது, அது திடீரென்று மறைந்துவிட்டது. ஏனென்றால், அப்போது அவர்கள் ஒளியைப் பிரகாசிக்கச் செய்ய வேண்டிய நேரமாக இருந்தது. 72. அந்தப் பெரிய மாநகரத்தின் வளைந்து நெளிந்து செல்லும் தெருக்களின் வழியாக, ஏறக்குறைய உலகத்தின் பண்டைய தலைநகரமாக விளங்கிய எருசலேமின் தெருக்களின் வழியாக அவர்கள் சென்றார்கள். அது ஒருகாலத்தில் மகத்தான மெல்கிசேதேக்கின் ஆட்சியிருக்கை இருந்த இடமாகவும், பண்டைய காலத்தின் மகத்தான தீர்க்கதரிசிகளும் வேதபாரகர்களும் எவ்வளவோ எழுதியிருந்த இடமாகவும் இருந்தது. ஆனால், அவர்களுடைய சோம்பேறித்தனமான, மாம்சத்திற்குரிய, அரைகுறை மயக்கநிலையிலிருந்த, தேவபக்தியற்ற வாழ்க்கையினால், சுவிசேஷத்தின் ஒளி அணைந்துபோயிருந்தது. 73. இதோ, யூதர்களுடைய பட்டணத்திற்குள் வந்திருந்த புறஜாதியார், “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்” என்று கூக்குரலிட்டுக்கொண்டிருந்தார்கள். ஓ, இரக்கமுள்ள பிதாவே, நாம் இதை நோக்கிச் சிந்தித்துப் பார்க்கும்போது, அந்த நாளில் நடந்த சம்பவம் எவ்வளவு ஆச்சரியமானதாக இருக்கிறது! யூதர்கள் அந்த அளவுக்கு ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்கள். அதனால், கிழக்கிலிருந்து வந்த புறஜாதிச் சாஸ்திரிகள், யூதர்களுடைய ராஜாவைக் கண்டுபிடிப்பதற்காகத் தொலைதூர தேசங்களிலிருந்து பயணம் செய்து வந்திருந்தார்கள். ஆனால், யூதர்களுக்கோ அதைக் குறித்து ஒன்றுமே தெரியவில்லை. 74. இன்றைக்கு தேவன் கல்வியறிவில்லாத மனிதர்களையும், ஒருவேளை ஆரம்பப் பள்ளிக் கல்வியைவிட அதிகமாகப் படித்திராத சிறுவர்களையும் சிறுமிகளையும் எடுத்துக்கொண்டு, பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அவர்களை எழுப்பியிருக்கிறார். அவர்கள் சபையின் காதுகளில், “அவர் தம்மை வெளிப்படுத்தவும், தம்மை அறியப்படுத்தவும் தம்முடைய மகத்தான வல்லமையோடு இங்கே இருக்கிறார்” என்று கூக்குரலிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், சபைக்கோ அதைக் குறித்து ஒன்றுமே தெரியவில்லை. 75. அவர்கள் மரியாதை செலுத்துவதற்காக வந்தார்கள். ராஜாதி ராஜாவுக்குக் கனத்தையும் மகிமையையும் செலுத்துவதற்காக வந்தார்கள். ஆனால், ஸ்தாபனப் பிரிவுகளுக்குரிய நித்திரையில் ஆழ்ந்திருந்த சபைக்கோ அதைக் குறித்து ஒன்றுமே தெரியவில்லை. அவர்கள் அந்நியர்களாக இருந்தார்கள். கிழக்கத்திய அலங்காரத் துணிகளும் குஞ்சங்களும் தொங்கும்படி அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த அழகிய மிருகங்களின்மீது அவர்கள் அமர்ந்திருந்த காட்சி எப்படியிருந்திருக்கும்! பிலோன் ஒருமுறை கூறியதுபோல, (Philon என்பவர் - யூத மதப் பின்னணியைக் கொண்ட கிரேக்க மொழித் தத்துவஞானி - ஆசி) “அவர்கள் ராஜாக்கள் அல்ல; ஆனால், ராஜாவினால் கௌரவிக்கப்படும் விருந்தினர்களாக இருப்பதற்குப் போதுமான அளவுக்குப் பெரிய மனிதர்களாக இருந்தார்கள்.” இதோ, அவர்கள் அந்தக் கம்பீரமான மிருகங்களின் முதுகில் அமர்ந்துகொண்டு, தெருக்களின் வழியாகச் சென்று, “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். “எருசலேம் நகரத்தார் அனைவரும், ஏரோதும்கூட கலங்கினார்கள்” என்று வேதாகமம் கூறுகிறது. அவர்களுடைய சாட்சி ஏதோ ஒன்றை அசைத்தது. 76. இன்றைக்கு சபையானது தன்னுடைய வேதசாஸ்திரப் பயிற்சிகளின் மூடத்தனத்திலிருந்து எழுந்து, ஜீவிக்கிறவரும் உயிர்த்தெழுந்தவருமான கிறிஸ்துவின் வல்லமையையும் அவருடைய மகிமையையும் காண முடியாமல் இருப்பது எவ்வளவு பரிதாபமான காரியம்! எழுத்தறிவற்ற, கல்வியறிவற்ற, ஸ்தாபனப் பிரிவுகளைக் கடந்த ஒரு இயக்கம் உலகத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறபோதும், சபை அதைக் காணாமல் இருக்கிறது. வாருங்கள், ஜீவனுள்ள தேவனுடைய மகிமையைக் காணுங்கள். ஆரம்பத்தில் பரிசுத்த ஆவியானவர் இறங்கினதுபோலவே இப்போதும் இறங்கிக்கொண்டிருக்கிறார். வேதவாக்கியங்கள் நிறைவேறியே ஆக வேண்டும். இதோ, அது கடைசிக் காலத்தில் இங்கே நடந்துகொண்டிருக்கிறது. 77. அந்தச் சாஸ்திரிகள் தெருக்களின் வழியாகச் சென்றபோது, “அவர் எங்கே இருக்கிறார்? அவர் எங்கே இருக்கிறார்?” என்ற இந்தச் செய்தியினால், ராஜாவிலிருந்து வாயிற்காவலன் வரைக்கும் அனைவரையும் கலங்கச் செய்தார்கள். அவர்களிடம் அதற்கான பதில் இருக்கவில்லை. 78. இன்றைக்கு ஸ்புட்னிக் செயற்கைக்கோள்கள் வானங்களில் பறந்துகொண்டிருக்கும்போது, முற்றிலுமாக அழிந்துபோகக்கூடிய நிலையின் அடையாளங்கள் நெருங்கிவந்திருக்கும்போது, பெண்களும் ஆண்களும் பாவத்தில் ஈடுபட்டு, தேவபக்தியற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும்போது, மக்கள், “இவைகளின் அர்த்தம் என்ன?” என்று கூக்குரலிடுகிறார்கள். ஆனால், சபையிடம் அதற்கான பதில் இல்லை. அவள் நித்திரையில் படுத்துக்கொண்டிருக்கிறாள். 79. ஆனால், தேவனுடைய அழிவில்லாத நித்திய ஒளியாகிய பரிசுத்த ஆவியானவர், விருப்பமுள்ளவர்களும் அவரைப் பெற்றுக்கொள்ளக்கூடியவர்களுமான எவர்மீதும் பிரகாசிப்பதற்காக இங்கே இருக்கிறார். 80. அந்த ஒளி மறைந்துபோயிருந்தது. அவர்கள் தங்களுடைய சாட்சியைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். கடைசியாக, ஆலோசனைக் கூட்டத்திற்காகச் சனகெரிப் சங்கத்தை ஒன்றுகூட்டி அழைத்தார்கள். ஞானிகளும் தீர்க்கதரிசிகளும் அங்கே வந்தார்கள். அவர்களுடன் சிறிய தீர்க்கதரிசிகளில் ஒருவரான மீகாவின் தீர்க்கதரிசனமும் எடுத்துவரப்பட்டது. அவர்கள் ராஜாவிடம், “யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே, யூதர்களுடைய ராஜாவாகிய கிறிஸ்து பிறக்க வேண்டிய இடம் பெத்லகேமாகத்தான் இருக்க வேண்டும்” என்று சொன்னார்கள். 81. நல்லது, பெத்லகேமுக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க ஒருவரும் முன்வரவில்லை. ஆனால், அவர்கள் அந்தப் பட்டணத்தின் வாசல் வழியாக வெளியே நடந்து சென்றார்கள். அந்த இருளின் பட்டணத்தை விட்டு வெளியேறியவுடன், அந்த ஒளி மீண்டும் அவர்களுக்கு முன்பாகத் தோன்றியது. அந்த நட்சத்திரம் மீண்டும் தோன்றியது. “அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்” என்று வேதாகமம் கூறுகிறது. அவர்கள் உண்மையிலேயே கொஞ்சம் சத்தமிட்டுக் கூக்குரலிட்டிருக்க வேண்டும். அவர்கள் மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். அவர்கள் அளவுகடந்த மகிழ்ச்சியினால் நிரம்பியிருந்தார்கள். அவர்கள்... தங்களுடைய பயணத்தின் இறுதி இடத்திற்கு அவர்களை வழிநடத்துவதற்காக அந்த நட்சத்திரம் மீண்டும் தோன்றியிருந்தது. 82. அவர்கள் அந்த நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்தார்கள். இப்போது, அது முன்பு இருந்ததைவிடச் சற்றுத் தாழ்வாக இருப்பதை அவர்கள் கவனித்தார்கள். இப்போது அது இன்னும் கொஞ்சம் அருகில் வந்திருந்தது. கடைசியாக, அவர்கள்... இரவு நேரத்தில் கர்த்தருடைய கரத்தினால் வழிநடத்தப்பட்டு, சந்தோஷப்பட்டு தேவனைத் துதித்துக்கொண்டே பயணம் செய்தார்கள். ஆனால், கடைசியாக அந்த நட்சத்திரம் ஒரு சிறிய தொழுவத்திற்கு வந்தது. அது ஒரு குன்றின் பக்கவாட்டில் இருந்த சிறிய இடமாகிய ஒரு குகை. அந்த நட்சத்திரம் அந்தக் குகைக்கு மேலாக வந்து நின்றது. அந்த மகத்தான சாஸ்திரிகள் ஒரு வருடமும் ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தங்கள் பயணத்தில் இருந்தார்கள். அவர்கள் வழிநெடுகிலும் பயணம் செய்துகொண்டும், கவனித்துக்கொண்டும், அந்த நட்சத்திரத்தைத் தவிர வேறு எந்தத் திசையையும் பின்பற்றாமலும் இருந்தார்கள். அது நின்றபோது, அவர்கள் உள்ளே சென்றார்கள். அங்கே குழந்தையையும், யோசேப்பையும், மரியாளையும் கண்டார்கள். அவர்கள் தங்களுடைய பொக்கிஷப் பெட்டியிலிருந்து காணிக்கைகளை எடுத்துவந்தார்கள். அவருக்குப் பொன்னையும், தூபவர்க்கத்தையும், வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாகச் செலுத்தினார்கள். நமக்குப் போதுமான நேரம் மட்டும் இருந்தால்! ஒரு நிமிடம் இங்கே நிறுத்துவோம். 83. அந்தப் பொன் எதைக் குறித்தது? அவர் ஒரு ராஜாவாக இருந்தார். அவர் ராஜாவாக ஆக்கப்பட வேண்டியவர் அல்ல; அவர் ராஜாவாகவே பிறந்தார். அவர் தேவனுடைய நித்திய ராஜாவாக இருந்தார். அவர் ஒரு ராஜாவாக இருந்ததால், அவர்கள் பொன்னைக் காணிக்கையாகச் செலுத்தினார்கள். 84. அவர்கள் தூபவர்க்கத்தையும் காணிக்கையாகச் செலுத்தினார்கள். அது ஒரு நறுமணப் பொருள்; மிகவும் விலையுயர்ந்தது. கிடைக்கக்கூடியவற்றிலேயே மிகச் சிறந்தது. அந்த நறுமணப் பொருளாகிய தூபவர்க்கம் எதைக் குறித்தது? அவர் தேவனுக்குச் சுகந்த வாசனையாக இருந்தார். ஏனென்றால், அவர் வியாதியஸ்தர்களைச் சுகமாக்கிக்கொண்டும், நன்மை செய்துகொண்டும் சுற்றித்திரிந்தார். அவர் ஒரு ராஜாவாக இருந்ததால் பொன் செலுத்தப்பட்டது. அவர் தேவனுக்குச் சுகந்த வாசனையாக இருந்ததால் தூபவர்க்கம் செலுத்தப்பட்டது. அவருடைய வாழ்க்கை தேவனை அவ்வளவாய்ப் பிரியப்படுத்தியது. தேவன் அவருடைய பரிசுத்தத்தையும் அழகையும் நறுமணத்தைப்போல முகர்ந்து மகிழ்ந்தார். ஏனென்றால், தேவனுடைய சொந்தப் பரிசுத்தமே அவரில் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. 85. ஓ, நாமும் ஒரு சுகந்த வாசனையாக இருக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! தேவனுடைய பரிசுத்தம் நம்மில் பிரதிபலித்து, நாசரேத்தூராராகிய இயேசு நன்மை செய்துகொண்டு சுற்றித்திரிந்ததுபோல நாமும் நன்மை செய்துகொண்டு சுற்றித்திரிந்து, கர்த்தருக்குச் சுகந்த வாசனையாக இருக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! 86. ஆனால், நாம் சண்டைபோடுகிறோம், வாக்குவாதம் செய்கிறோம், மனக்குழப்பமடைகிறோம், சந்தேகப்படுகிறோம். அதனால்தான் அது தேவனுடைய நாசிகளுக்குத் துர்நாற்றமாக மாறுகிறது. நாம் இருக்கக்கூடாத பழைய இடங்களுக்குள் செல்வதும், அவற்றிலிருந்து வெளியே வருவதுமாக நம்முடைய வாழ்க்கை இருந்துவந்திருக்கிறது. நாம் சொல்லக்கூடாத காரியங்களைச் சொல்கிறோம். நாம் செய்யக்கூடாத காரியங்களைச் செய்கிறோம். நாம் சண்டைபோட்டு, உலகத்தின் பக்கம் சேர்ந்துகொண்டு, மிகவும் இக்கட்டான முக்கியமான தருணங்களில் கிறிஸ்துவை மறுதலிக்கிறோம். அதனால்தான் நம்மால் ஒரு சுகந்த வாசனையாக இருக்க முடியவில்லை. ஆனால், அவர் அப்படிப்பட்ட சுகந்த வாசனையாக இருந்தார். அந்தச் சாஸ்திரிகள் அவருக்குத் தூபவர்க்கத்தைக் காணிக்கையாகச் செலுத்தினார்கள். 87. இப்போது, அவர்கள் அவருக்கு வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாகச் செலுத்தினார்கள். வெள்ளைப்போளம் மிகவும் விலையுயர்ந்த, ஆனால் கசப்பான ஒரு மூலிகைப் பொருள் என்பது எவருக்கும் தெரியும். வெள்ளைப்போளம் எதைக் குறித்தது? அவருடைய மகத்தான, மேலான பலியைக் குறித்தது. கல்வாரியில் நசுக்கப்பட்டு, அரைக்கப்பட்ட அவருடைய இளமையான ஜீவனைக் குறித்தது. அங்கே உலகத்தின் பாவங்கள் அவரைத் துண்டு துண்டாக அரைத்தன. அவர் ஒரு ராஜாவாக இருந்ததால் பொன். அவருடைய இனிமையான, அன்புள்ள வாழ்க்கையினிமித்தம் தூபவர்க்கம். அவர் பாவிகளுக்காக மரித்ததினால், அவருடைய பலியினிமித்தம் வெள்ளைப்போளம். “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” அதனால்தான் அவர்கள் அவருக்கு வெள்ளைப்போளத்தைக் காணிக்கையாகச் செலுத்தினார்கள். 88. தேவனால் சொப்பனத்தில் எச்சரிக்கப்பட்டபடியால், அவர்கள் வேறொரு வழியாகச் சென்றார்கள். அவர்கள் திரும்பிச் செல்லவில்லை. ஆனால், அவர்களுடைய... அவர்களுடைய பயணம் நிறைவடைந்திருந்தது. அந்த நட்சத்திரம் தன்னுடைய பாதையைப் பூர்த்தி செய்திருந்தது. 89. நண்பரே, இன்றைக்கு அந்த நட்சத்திரம் நமக்கு எதைக் குறிக்கிறது? தானியேல் நமக்கு அதற்கான பதிலைத் தருகிறார். தானியேல் 12:3. அது, “ஞானவான்களும் தங்கள் தேவனை அறிந்திருக்கிறவர்களும் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்” என்று கூறுகிறது. 90. அப்படியானால், இன்றைக்கு நாம் யாராக இருக்கிறோம்? நாம் நட்சத்திரங்களாக இருக்கிறோம். மறுபடியும் பிறந்த ஒவ்வொரு கிறிஸ்தவனும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குச் சாட்சியாகவும், கர்த்தராகிய இயேசுவின் வல்லமையையும் பரிசுத்தத்தையும் பிரதிபலிக்கிற ஒரு நட்சத்திரமாகவும் இருக்கிறான். தன்னுடைய வாழ்க்கையில் அவரைப் பிரதிபலிக்கவும், தன்னுடைய பேச்சில் அவரைப் பூரணமாக வெளிப்படுத்தவும், அவருடைய சுகமளிக்கும் வல்லமையில் அவரைப் பூரணமாக வெளிப்படுத்தவும், அவருடைய உயிர்த்தெழுதலில் அவரைப் பூரணமாக வெளிப்படுத்தவும், பிதாவாகிய தேவனால் அவர் நமக்குப் பிரதிபலிக்கப்பட்ட ஒவ்வொரு விதத்திலும் அவரைப் பிரதிபலிக்கவும் இருக்கிறான். நாம் நட்சத்திரங்களாக இருக்கிறோம். 91. கவனியுங்கள்! நீங்கள் எப்படிப்பட்ட ஒரு நட்சத்திரமாக இருக்க வேண்டும்? இந்த நட்சத்திரம் தன்னுடைய சொந்த வல்லமையினால் வழிநடத்தப்படவில்லை. அது சர்வவல்லமையுள்ள தேவனுடைய பரலோக வல்லமைகளினால் வழிநடத்தப்பட்டது. நாம் எப்போதாவது பாவிகளைக் கிறிஸ்துவிடம் வழிநடத்துகிறவர்களாக இருக்க வேண்டுமானால், பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுகிறவர்களாக இருக்க வேண்டும். ரோமர் 8:1 கூறுகிறது: “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.” நாம் ஒரு நட்சத்திரமாக இருந்து, கிறிஸ்துவின் ஒளியைப் பிரதிபலித்து, பாவிகளை அவரிடம் கொண்டுவர வேண்டுமானால், பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுகிறவர்களாக இருக்க வேண்டும். சரிதான்! 92. நாம் சாதாரணமானவர்களாக இருக்க முடியாது. நாம் வழக்கத்திற்கு மாறானவர்களாக இருக்க வேண்டும். நாம் வழக்கமானவர்களாக இருக்க முடியாது. ஏனென்றால், தேவனுடைய ஜனங்கள் ஒரு விசேஷித்த ஜனங்களாக இருக்கிறார்கள். காலங்கள் தோறும் அவர்கள் அப்படித்தான் இருந்துவந்திருக்கிறார்கள். 93. அந்த நட்சத்திரம் விசேஷித்த ஒன்றாக இருந்தபோதிலும், அது மிகவும் பிரகாசமுள்ளதாக இருந்தது. உலகக் கல்வியிலோ, உலகக் காரியங்களிலோ சிறந்து விளங்குகிற பிரகாசம் அல்ல; கர்த்தருக்கு முன்பாக ஒரு பலியாகப் பிரகாசிக்கிற பிரகாசமாக இருந்தது. அந்தச் சாஸ்திரிகள் ராஜாதி ராஜாவின் சமுகத்தில் விழுந்து பணிந்துகொண்டதுபோல, நாமும் அவருடைய ஒளியைப் பிரதிபலிப்பதற்காக அவருடைய சமுகத்தில் சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்துகொள்கிறோம். 94. நீங்கள் ஒரு நட்சத்திரமாக இருக்கிறீர்கள். ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு நட்சத்திரமாக இருக்கிறான். வழிதவறிப்போனவர்களை வழிநடத்துவதற்கும், களைத்துப்போனவர்களை வழிநடத்துவதற்கும், தேடிக்கொண்டிருக்கிறவர்களை நோக்கிப் பயணியின் காலடிகளை வழிநடத்துவதற்கும் அவன் ஒரு நட்சத்திரமாக இருக்கிறான். அப்படியானால், அந்த நட்சத்திரம் தன்னைத்தானே வழிநடத்திக்கொள்ள முடியாது. அது ஆவியானவரால் வழிநடத்தப்பட வேண்டும். அது உலகத்தின் காரியங்களை விட்டு விலகி, இப்போதைய வாழ்க்கையில் தேவபக்தியோடும் தெளிந்த புத்தியோடும் வாழ்வதன்மூலம், தன்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய பிரகாசத்தைப் பிரதிபலிக்க வேண்டும். பிரகாசித்த அந்த மகத்தானவருடைய ஒளியை அது பிரதிபலிக்க வேண்டும். 95. அப்படியானால், நாம் என்ன செய்ய வேண்டும்? எழுந்து, மரித்துக்கொண்டிருக்கிறவர்களுக்குத் தேவனுடைய ஒளியைப் பிரகாசிக்கச் செய்ய வேண்டும். இந்த உலகத்தின் ஆழ்ந்த இருளில், உயிர்த்தெழுதலின் வல்லமையிலுள்ள கர்த்தராகிய இயேசுவின் பிரசன்னத்தை நாம் பிரதிபலித்துப் பிரகாசிக்கச் செய்ய வேண்டும். அவர் நேற்றைக்கு எப்படியிருந்தாரோ, இன்றைக்கும் அப்படியே இருக்கிறார். நாம் அவரைப் பிரதிபலிக்க வேண்டும். 96. ஆனால், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த நட்சத்திரம் தன்னுடைய பாதையை முடித்த பிறகு, தனக்கென்று எந்தக் கனத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை. அந்த நட்சத்திரம் அந்த மனிதர்களை அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்று, அந்தப் பரிபூரண ஒளியை அவர்களுக்குக் காண்பித்தது. அவ்வளவுதான். 97. நண்பர்களே, இன்று காலையில் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினர்களாகிய நாம் தேவனுடைய ஒளிகளாக இருக்கிறோம். ஆனால், நமக்கென்று எந்தக் கனத்தையும் எடுத்துக்கொள்வதில்லை. நம்முடைய—நம்முடைய நோயாளியையும், நம்முடைய—நம்முடைய... நாம் வழிநடத்திக்கொண்டிருக்கிற அந்த நபரையும், நாம் அவர்களைப் பெற்றுக்கொண்டபோது, நம்மை நாமே கனப்படுத்திக்கொள்ளாமல், “உலகத்திலே வருகிற ஒவ்வொரு மனிதனுடைய வழியையும் பிரகாசிப்பிக்கிற, பிரகாசித்துக்கொண்டிருக்கிற அந்த மகத்தான, பரிபூரண ஒளியிடம்” அவர்களை வழிநடத்த வேண்டும். அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. சாண்டா கிளாஸ் என்று அழைக்கப்படுகிற ஒரு கட்டுக்கதையிடமோ, ஏதோ ஒரு ஸ்தாபனப் பிரிவைச் சேர்ந்த சபையிடமோ அல்ல; ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னும் அந்த உண்மையான, பரிபூரண ஒளியிடமே அவர்களை வழிநடத்த வேண்டும். நாம் ஜெபிப்போமாக. 98. தேவன் உங்களை எடுத்த அந்த மண்ணை நோக்கி உங்கள் தலைகளைத் தாழ்த்தியிருக்கிற இந்த நேரத்தில், இரவில் நட்சத்திரங்கள் பிரகாசிப்பதும், பகலில் சூரியன் பிரகாசிப்பதும் எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக ஒருநாள் நீங்கள் அந்த மண்ணுக்கே திரும்பிச் செல்லப்போகிறீர்கள். இந்தக் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தின நாளில் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களை இரட்சகரிடம் வழிநடத்த வேண்டும் என்றும், இவ்விதமாக அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நீங்கள் விரும்பினால், அவரை நோக்கி உங்கள் கையை உயர்த்தி, “தேவனே, என்மேல் இரக்கமாயிரும். நான் ஒவ்வொரு நாளும் நடந்துசெல்லும்போது, என்னுடைய பாதையில் பிரகாசித்தருளும். கடைசியாக, என்னை அந்தப் பரிபூரண ஒளியிடம் வழிநடத்தும். அப்பொழுது என்னுடைய வாழ்க்கை அவருடைய வாழ்க்கையோடு ஒன்றாகக் கலந்துவிடும். நான் அழிவில்லாத நித்திய ஒளியைப் பெற்றுக்கொள்வேன்” என்று சொல்லுவீர்களா? 99. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, எனக்குப் பிரியமான சகோதரியே; உங்களையும், சகோதரியே; உங்களையும், சகோதரனே; பின்னால் இருக்கிற உங்களையும், சகோதரனே; உங்களையும், சகோதரியே; உங்களையும், என் சகோதரனே, கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்கள் கைகளைக் காண்கிறார். ஓ, சகோதரியே, கர்த்தர் உங்களைக் காண்கிறார். ஆம், இங்கே இந்தப் பக்கத்தில் இருக்கிற சகோதரியே, கர்த்தர் உங்களைக் காண்கிறார். நிச்சயமாகவே. 100. “ஓ, இயேசுவே, இன்று காலையில் பரிசுத்த ஆவியானவரை அனுப்பி, தவறாக வழிநடத்தப்பட்ட என்னுடைய பரிதாபமான வாழ்க்கையைச் சரியான பாதையில் நடத்தும். நான் ஓடிச் சென்று ஒரு சபையில் சேர்ந்தேன். நான் ஒரு கத்தோலிக்கனாக இருந்தேன். அதன் பிறகு ஒரு பாப்டிஸ்டாக இருந்தேன். அதன் பிறகு ஒரு பிரஸ்பிடேரியனாக இருந்தேன். நான் பெந்தெகொஸ்தே சபைக்குச் சென்றேன். நான் எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். கடைசியாக, கர்த்தாவே, நான்—நான் வெறுமனே குழப்பத்தில்தான் இருக்கிறேன் என்பதை அறிந்துகொண்டேன். நான் எங்கே நின்றுகொண்டிருக்கிறேன் என்பதே எனக்குத் தெரியவில்லை. ஆனால், அந்தப் பரலோக சரீரம், அந்த விடிவெள்ளி நட்சத்திரமாகிய பரலோக ஜீவன், தேவனுடைய மகத்தான ஆவியானவர், இன்று என்னை அவருக்குள் நான் இருக்க விரும்புகிற அந்த இடத்திற்கு வழிநடத்துவாராக. அங்கே நான் என்னுடைய இருதயத்தை ஒரு முன்னணையாக அமைத்து, அந்த ஒருவரை அதில் தொட்டிலிட்டு வைத்துக்கொள்ள முடியும். அப்பொழுது அவர் எல்லா இருளான நிழல்களின் வழியாகவும், மரண இருளின் பள்ளத்தாக்குகளின் வழியாகவும் என்னை வழிநடத்துவார். அந்தப் பாதையில் நான் வரும்போது, எனக்கு எந்தப் பயமும் இருக்காது.” 101. இந்த ஆராதனையை முடிப்பதற்கு முன்பாக இன்னும் யாராவது ஒருவர் இருக்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா; உங்களையும், ஐயா; உங்களையும், ஐயா. ஆம், ஐயா, இது ஆண்களுக்கான ஒரு மகத்தான நேரமாக இருந்தது. இதற்கு முன்பு பெரும்பாலும் பெண்கள்தான் இருந்தார்கள். ஆனால், இந்த முறை ஆண்கள் தங்கள் கைகளை உயர்த்தினார்கள். நிச்சயமாகவே, ஞானிகளான மனிதர்கள்தான் அந்த ஒளியைத் தேடிக்கொண்டும், அதைப் பின்பற்றிக்கொண்டும் வந்தார்கள். தேவன் உங்களை விரும்புகிறார். சிறிய மரி-... 102. சிறிய மரியாளும் யோசேப்பும் அந்தப் பட்டணத்திற்குள் சென்றிருந்தார்கள். அங்கே இயேசு பிறந்தார். சாஸ்திரிகள் வந்து சேர்ந்த நேரத்தில், அவர்கள் நீண்ட காலமாகப் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், கடைசியாக அவர்கள் தங்களுடைய பயணத்தின் மகத்தான உச்சக்கட்டத்தை அடைந்தார்கள். அந்த நட்சத்திரம் அவர்களை வழிநடத்தியிருந்தது. இப்போது, நீங்கள் நீண்ட காலமாக ஒரு கிறிஸ்தவனாக இருக்க விரும்பிக்கொண்டிருக்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டிருக்கலாம். இன்று காலையில் இதுவே அந்த உச்சக்கட்டமாக இருக்கலாம். ஏனென்றால், இப்போது நீங்கள் அவரை உங்களுடைய இருதயத்தில் தொட்டிலிட்டு ஏற்றுக்கொள்ளும்போது, அவரை உங்களுடைய இரட்சகராகப் பெற்றுக்கொள்வீர்கள். இந்தப் பீட அழைப்பை முடிப்பதற்கு முன்பாக இன்னும் ஒருவர் இருக்கிறாரா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. மிகவும் நல்லது. நன்றி. 103. இப்போது, இங்கே உங்களில் எத்தனை பேர், “ஓ, கர்த்தாவே, தவறிப்போக முடியாத வேதவாக்கியங்களின்மூலம் எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறபடி, உமக்குக் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட அந்த வெள்ளைப்போளத்தில், உம்முடைய ஜீவன் ஊற்றப்படுவது அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. ‘நம்முடைய மீறுதல்களினிமித்தம் நீர் காயப்பட்டீர்; உம்முடைய தழும்புகளால் நாங்கள் குணமாகிறோம்.’ எங்களைச் சுகமாக்குவதற்காக உம்முடைய தழும்புகள் இருக்கும்படி, நீர் சவுக்கடி கொடுக்கப்படும் தூணில் கசப்பான சவுக்கடிகளைச் சகித்தீர். கர்த்தாவே, இன்று எனக்கு உம்முடைய சுகமளிக்கும் வல்லமை தேவைப்படுகிறது. என்னுடைய வாழ்க்கையிலிருந்து எல்லாச் சந்தேகங்களையும் நீர் எடுத்துப்போடுவீரா? இனிமேல் நான் ஒருபோதும் சந்தேகப்படாதபடி, அவற்றை என்னிடமிருந்து எடுத்துப்போடும். இப்பொழுதே நான் தாழ்மையுடன் உம்மிடம் வந்து, என்னுடைய சுகமளித்தலுக்காக உம்மை விசுவாசிக்கும்படி எனக்கு அருளும்” என்று சொல்வீர்கள்? 104. வியாதியுள்ளவர்களே, அதற்காக நீங்கள் உங்கள் கைகளை உயர்த்துவீர்களா? என் அருமையான நண்பர்களே, கர்த்தர் உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு அருளுவாராக. 105. உங்களால் அவரைச் சந்தேகிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. அவர் இன்று ஈஸ்டர் குழந்தையாக, அல்லது... அந்த—அந்தக் கிறிஸ்துமஸ் குழந்தையாக, தேவனுடைய குமாரனாக, எல்லாவற்றிற்கும் போதுமானவராக நிற்கிறார். அவர் ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்றுகிறார். உங்களுக்குத் தேவையான ஒவ்வொரு காரியத்தையும் அவர் நிறைவேற்றுகிறார். அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். வேதாகமத்தில் நாம் என்ன செய்யும்படி சொல்லப்பட்டிருக்கிறோம்? “வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.” 106. இப்போது, பரலோகப் பிதாவே, நட்சத்திரத்தைக் குறித்த செய்தியைக் கேட்பதற்காக இன்று காலையில் நீர் அனுப்பியிருக்கிற இந்தச் சிறிய ஜனக்கூட்டத்தை உம்மிடத்தில் கொண்டுவருகிறேன். எல்லா வகையான வாழ்க்கை நிலைகளிலுமுள்ள மனிதர்களோடு நீர் எவ்விதமாக இடைபடுகிறீர்! சட்டவிரோதமாக மதுபானம் விற்பவனோடு நீர் இடைபடுகிறீர். குடிகாரனோடு நீர் இடைபடுகிறீர். விஞ்ஞானியோடு நீர் இடைபடுகிறீர். இல்லத்தரசியோடு நீர் இடைபடுகிறீர். ஊழியக்காரனோடு நீர் இடைபடுகிறீர். சபை அங்கத்தினனோடு நீர் இடைபடுகிறீர். நீரே தேவன். ஒருவராலும் உம்மிடமிருந்து தப்பிக்க முடியாத அளவுக்கு நீர் மகத்தானவராக இருக்கிறீர். தங்கள் இருதயத்தில் உண்மையுள்ளவர்களாக இருப்பவர்களுக்கு, அவர்கள் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவர்களாகவும், எந்த விசுவாசத்தைக் கொண்டவர்களாகவும் இருந்தாலும், நீர் இரக்கம் காண்பிக்கிறீர். 107. ஆகவே, இன்று காலையில் தங்கள் கைகளை உயர்த்தினவர்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். என்னுடைய கணிப்பின்படி, சுமார் இருபது அல்லது முப்பது பேர் இருக்கலாம். தேவனே, இந்தக் கணப்பொழுதிலேயே, இப்பொழுதே, அந்த மகத்தான நித்தியமும் அழிவில்லாததுமான ஒளி அவர்களுடைய ஆத்துமாக்களுக்குள் பிரகாசிக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன். அவர்கள் சபைகளில் சேர்ந்தும், சில குறிப்பிட்ட சடங்குகளைக் கடைப்பிடித்தும், நீண்ட காலமாக ஏங்கித் தேடிக்கொண்டிருந்த அந்த மனச்சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளட்டும். ஆனால், பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் பிரகாசிப்பாராக. 108. ஏசாயா கூறினதுபோல, “இந்த ஜனங்கள் அடர்ந்த இருளில் குடியிருந்தார்கள்; ஆனால், அவர்கள்மேல் ஒரு பெரிய வெளிச்சம் பிரகாசித்தது.” கர்த்தாவே, உமக்காக ஏங்கிக்கொண்டிருக்கிற இந்த இருதயங்களில் அந்தத் தீர்க்கதரிசனம் இன்றைக்கு நிறைவேறும்படி அருளும். எல்லாப் புத்திக்கும் மேலான அந்தச் சமாதானத்தை அவர்களுக்குத் தந்தருளும். அவர்கள் உம்மைச் சந்தித்திருக்கிறார்கள், உம்மோடு பேசியிருக்கிறார்கள், உடைந்து கிழிந்துபோன தங்களுடைய வாழ்க்கைகளை உமக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள் என்ற பரிபூரண திருப்தியை அவர்களுக்குத் தந்தருளும். அப்பொழுது நீர் உம்முடைய பொன், தூபவர்க்கம், வெள்ளைப்போளம் ஆகியவற்றினால் அவர்களைச் சுகமாக்கி, உம்முடைய சொந்த மகிமைக்காக அவர்களைக் கனத்திற்குரிய பாத்திரங்களாகிய ஜனங்களாக்குவீராக. கர்த்தாவே, அதை அருளும். 109. இப்போது, வியாதியஸ்தர்களுக்காகவும் உபத்திரவப்படுகிறவர்களுக்காகவும், நாங்கள் அவர்களுக்காக ஜெபித்து, அவர்கள்மேல் கைகளை வைக்க வேண்டும் என்று நீர் எங்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுத்திருக்கிறீர். மேலும், உம்முடைய விலையேறப்பெற்ற உதடுகளிலிருந்து வெளிவந்த கடைசி வார்த்தைகளாக நீர், “நீங்கள் உலகமெங்கும்போய், சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்; அவர்கள் வியாதியஸ்தர்மேல் கைகளை வைத்தால், அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்று கூறினீர். 110. இங்கே படுத்திருக்கிற ஒரு அருமையான சிறுமியை நாங்கள் அறிந்திருக்கிறோம். அவளை நேசிக்கிற உண்மையுள்ளவர்கள், புளோரிடாவிலிருந்து அவளை விமானத்தில் இங்கே அழைத்துவந்திருக்கிறார்கள். இப்பொழுது அவள் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறாள். உம்முடைய ஊழியக்காரர்களில் அநேகர் ஏற்கெனவே அவளுக்காக ஜெபித்திருக்கிறார்கள். மேலும்—மேலும் அநேக மருத்துவர்கள் அவளைப் பரிசோதித்துப் பார்த்து, தங்கள் தலைகளை அசைத்து, “இனிமேல் வேறொன்றும் செய்ய முடியாது” என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அந்தச் சிறிய தாயும், அவள்மேல் அக்கறையுள்ளவர்களும், அதை ஒரு முடிவான பதிலாக ஏற்றுக்கொள்ள விரும்பாததற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். அவர்கள் ஒவ்வொரு கல்லையும் புரட்டிப் பார்த்துவிட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். ஜீவனுள்ள தேவனிடத்தில் அவர்களுக்குத் தயவு மட்டும் கிடைக்குமானால், அவர்களுடைய அருமையான சிறுமி சுகமாக்கப்பட்டு, உயிரோடிருப்பாள். ஓ, கர்த்தாவே, இங்கே அமர்ந்திருக்கிற மற்றவர்களோடுகூட அவளுக்கும் அதை அருளும். 111. இன்று காலையில் இங்கே அநேகர் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் எழுந்து நின்று, அந்தச் சாஸ்திரிகள் கூறினதுபோல, “கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டோம்” என்று சாட்சி சொல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அநேகர் எழுந்து நின்று, “நாங்கள் அவருடைய நன்மையை ருசித்திருக்கிறோம். அவருடைய சுகமளிக்கும் வல்லமையை உணர்ந்திருக்கிறோம்” என்று சொல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அந்த வல்லமை அவர்களுடைய சரீரங்களிலிருந்த புற்றுநோயையும், குருடான கண்களையும், ஊனமுற்ற அவயவங்களையும், எல்லாவிதமான வியாதிகளையும் நீக்கியிருக்கிறது. கர்த்தாவே, தேசங்கள் எங்கிலும் எங்களுடைய குரலின் உச்சத்தில் அவருடைய துதிகளை நாங்கள் உரக்கச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். 112. இன்று காலையில் இங்கே இருக்கிற உம்முடைய பிள்ளைகளாகிய இவர்களும் அதேவிதமாக அவருடைய ஆசீர்வாதங்களில் பங்குபெறுகிறவர்களாக இருக்கட்டும். ஊழியக்காரர்களாகிய நாங்கள் அவர்களுக்காக ஜெபித்து, அவர்கள்மேல் கைகளை வைக்கிற எங்களுடைய கடமைகளை நிறைவேற்றும்போது, கர்த்தாவே, “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் எதைக் கேட்டாலும், அதை நான் செய்வேன்” என்று கூறின உம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அவர்கள் சுகமாக்கப்படும்படி அருளும். தேவன் அதைச் சொல்லியிருக்கும்போது, நாம் அதை எப்படிச் சந்தேகிக்க முடியும்? தானியேலின் அந்தத் தீர்க்கதரிசனங்கள் எவ்வளவு நிச்சயமாக நிறைவேற வேண்டியிருந்ததோ, தேவன் ஜீவிக்கிறது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறியே ஆக வேண்டும். அவருடைய மகிமைக்காக நீர் அதை அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். 113. இப்போது இங்கே இருக்கிற ஆண்களும் பெண்களுமாகிய நீங்கள், கர்த்தராகிய இயேசுவை உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதற்காக உங்கள் கைகளை உயர்த்தினீர்களே, அதைக் குறித்து நான் என்னுடைய மிகுந்த தாழ்மையான விசுவாசத்தோடும், என்னுடைய இருதயத்தின் உண்மையோடும் நேர்மையோடும் இதைக் கூறுகிறேன்... ஜனங்களைப் பீடத்திற்கு அழைத்து வருவது வழக்கமாக இருக்கிறது என்பதை நான் அறிவேன். அது சரிதான். அதற்கு எதிராக எனக்கு ஒன்றுமில்லை. ஆனால், பீடத்திற்கு வரும்போது நீங்கள் செய்யக்கூடிய ஒரே ஒரு காரியம் என்னவென்றால், தேவன் உங்களை இரட்சித்ததற்காக அவருக்கு நன்றி சொல்லுவதுதான். ஏனென்றால், நீங்கள் உங்கள் கைகளை உயர்த்தும்போது, நீங்கள் சொல்லுகிறதை உண்மையாகவே உங்கள் இருதயத்தில் அர்த்தப்படுத்துகிற அந்தக் கணப்பொழுதிலேயே, உங்கள் சாட்சியின் அடிப்படையில் தேவன் உங்களை அப்போதே ஏற்றுக்கொள்கிறார். நீங்கள் புவியீர்ப்பு விசையின் விதிகளை மீறினீர்கள். அந்த நட்சத்திரம் சூரிய மண்டலத்தின் விதிகளை மீறினதுபோலவே நீங்களும் செய்தீர்கள். 114. சூரிய மண்டலம் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கின்படி இயங்குகிறது. அது அப்படித்தான் இயங்க வேண்டியிருக்கிறது. ஆனால், இந்த நட்சத்திரம் அந்த ஒழுங்கை மீறி, அவை எல்லாவற்றிற்கும் மேலாகக் கடந்து சென்றது. ஏனென்றால், தேவனே அதை வழிநடத்திக்கொண்டிருந்தார். 115. இன்றைக்கு வழக்கமான இயற்கை ஒழுங்கின்படி, இங்கே இருக்கிற உங்களில் அநேகர் மரிக்க வேண்டியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. மருத்துவர்கள் தங்களால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டார்கள். அது சரிதான். ஆனால், ஜீவனுள்ள தேவனுடைய ஆவியானவர் அந்த ஒழுங்கை மீறி, “நான் உன்னை இதன் வழியாகக் கடந்துசெல்லச் செய்வேன்” என்று கூறுகிறார். ஆனால், அது ஒரு வினாடியிலேயே நடந்துவிடாமலும் இருக்கலாம். அவர்கள் காணக்கூடாதவரைக் காண்கிறதுபோல, உறுதியாய்ச் சகித்துக்கொண்டிருந்தார்கள். ஆபிரகாமுக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது. அது நிறைவேறுவதற்கு முன்பாக அவர் இருபத்தைந்து வருடங்கள் காத்திருந்தார். ஆனால், அவர் தொடர்ந்து முன்னேறிச் சென்றார். அந்த வாக்குத்தத்தத்திற்கு முரணாக இருந்த ஒவ்வொரு காரியத்தையும், அது இல்லாததுபோலவே அவர் எண்ணினார். 116. நான் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்திருக்காவிட்டால், இந்தக் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தின நாளில், இந்தச் சிறிய ஜனக்கூட்டத்திற்கு முன்பாக இங்கே நின்றுகொண்டு, இந்தக் காரியங்களை நான் சொல்ல மாட்டேன். 117. நேற்று, அந்தப் பெண்மணி இங்கே இருக்கக்கூடும். அவருடைய பெயர் திருமதி ரைட். நியூ ஆல்பனியிலிருந்து வந்த திருமதி ரைட், நீங்கள் இங்கே இருக்கிறீர்களா? உங்களில் அநேகர் அவரை அறிந்திருக்கலாம். நியூ ஆல்பனியில் அவர் நன்கு அறியப்பட்ட ஒரு பெண்மணி என்று நான் நம்புகிறேன். இங்கே கடைசியாக நடந்த சுகமளிக்கும் ஆராதனையில், அங்கே... எனக்குத் தெரியவில்லை; அது பகுத்தறிதலின் கீழ் நடந்தது. \[ஒலிப்பதிவில் இடைவெளி—பதிப்பாசிரியர்.\] 118. அடுத்த ஞாயிற்றுக்கிழமை இரவில், கர்த்தருக்குச் சித்தமானால், நாம் பகுத்தறிதலை நடத்த முயற்சி செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை காலையில் அதைச் சரியாக நடத்த முடியவில்லை. ஏனென்றால், ஒரு வாரத்திற்கு முன்பு, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்களே. பாருங்கள், காலையில் ஜனங்கள் சரியான நேரத்திற்கு இங்கே வந்து வரிசையில் நிற்க முடியவில்லை. ஏனென்றால், உங்களுக்குப் பாத்திரங்களைக் கழுவுவது போன்ற வேலைகள் இருக்கின்றன. ஆனால், ஞாயிற்றுக்கிழமை இரவில், ஒருவேளை அடுத்த ஞாயிற்றுக்கிழமை இரவில், கர்த்தருக்குச் சித்தமானால், நாம் அதை நடத்த முயற்சி செய்வோம். 119. பகுத்தறிதல் நடந்துகொண்டிருந்தபோது நிகழ்ந்த ஒரே ஒரு சம்பவத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன். திருமதி ரைட்டைப் பற்றிச் சொல்லி முடித்தவுடன் அதைச் சொல்கிறேன். 120. அவரால் இங்கே வர முடியவில்லை. நியூ ஆல்பனியிலுள்ள மருத்துவர்களின் பெயர்களை என்னால் சொல்ல முடியும். ஆனால், அப்படிச் செய்வது ஞானமான காரியமாக இருக்காது. ஏனென்றால், அநேக நேரங்களில் அவர்கள் தங்களுடைய பெயர்களை நீங்கள் அவ்வாறு குறிப்பிடுவதை விரும்புவதில்லை. முடிந்தவரைக்கும் எல்லா மனிதர்களோடும் சமாதானமாக வாழ நாங்கள் முயற்சி செய்கிறோம். 121. நாங்கள் எங்களுடைய மருத்துவர்களை நேசிக்கிறோம். ஒருவேளை இன்று காலையிலும் மருத்துவர்கள் இங்கே அமர்ந்திருக்கலாம். எனக்கு அநேக மருத்துவர் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நல்ல மனிதர்கள், தேவனை நம்புகிற கிறிஸ்தவ மனிதர்கள். அவர்கள் சுகமளிப்பவர்கள் அல்ல; அவர்கள் வெறும் மனிதர்கள்தான். சரீரப்பிரகாரமாக அவர்களால் என்ன செய்ய முடியுமோ, அதை அவர்கள் செய்வார்கள். அவர்கள் இயற்கைக்கு உதவி மட்டுமே செய்கிறார்கள். அவர்கள்... முறிந்துபோன ஒரு எலும்பைச் சரியாகப் பொருத்துகிறார்கள்; ஏதாவது ஒரு அடைப்பை அகற்றுகிறார்கள்; அதுபோன்ற காரியங்களைச் செய்கிறார்கள். ஆனால், தேவன்தான் உயிரணுக்களை உருவாக்க வேண்டும். சுகமாக்கக்கூடியவர் அல்லது—அல்லது திசுக்களை உருவாக்கக்கூடியவர் தேவன் ஒருவரே. எந்த மருந்தும் அதைச் செய்ய முடியாது. 122. இப்போது, இந்தப் பெண்மணியின் இருதயத்தின் அருகில் இரத்தக் கட்டிகள் இருந்தன. அவருக்கு அறுபது வயதுக்கு மேல் இருக்கும். அவர் மிகவும் மோசமாக வீங்கிப்போயிருந்தார். வழக்கமாக இருந்த அளவைவிட இருமடங்கு பெரிதாக இருக்குமளவுக்கு வீங்கிப்போயிருந்தார். அவர்கள் தொலைபேசியில் அழைத்தார்கள். என் மனைவி என்னைத் தொலைபேசியிடம் அழைத்துவந்து, “பில்லி, அவர்கள்... நியூ ஆல்பனியிலிருந்து ஒரு பெண்மணி உங்களிடம் பேச விரும்புகிறார்” என்று கூறினாள். 123. நான், “நல்லது, சகோதரியே, இன்று காலையில் வாருங்கள். கூடாரத்தில் நாங்கள் ஒரு சுகமளிக்கும் ஆராதனையை நடத்தப்போகிறோம்” என்று சொன்னேன். 124. அவர், “என் அருமையான சகோதரரே, அவரை அழைத்துவர முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், அவரால் அசையக்கூட முடியவில்லை” என்று கூறினார். மேலும், “அவர் இப்பொழுதே மரித்துக்கொண்டிருக்கிறார்” என்றும், “அவர் உயிர்பிழைப்பதற்கு எந்த நம்பிக்கையும் இல்லை” என்றும் கூறினார். மேலும், “உங்களுடைய ஜெபங்களின் மூலமாக தேவன் செய்திருக்கிற மகத்தான காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். நீங்கள் அவருக்காக ஜெபிக்க மாட்டீர்களா? நீங்கள் இங்கே வருவீர்களா?” என்று கேட்டார். 125. நான், “என்னால் அங்கே வர முடியாது. ஆனால், தொலைபேசியை அவருடைய காதருகில் வைக்க உங்களால் முடியுமா?” என்று கேட்டேன். 126. அவர், “அவருடைய படுக்கையைத் தொலைபேசியின் அருகில் நகர்த்த முடியும் என்று நினைக்கிறேன்” என்று கூறினார். அவர் அந்தப் படுக்கையை நகர்த்தி, அந்தப் பெண்மணியைத் தொலைபேசியின் அருகில் கொண்டுவந்தார். அந்தப் பெண்மணியால் பேசுவதற்குக்கூட அரிதாகத்தான் முடிந்தது. 127. நான், “நீங்கள் விசுவாசிப்பீர்களானால்!” என்று சொன்னேன். விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியாயிருக்கிறது. நீங்கள் வெறுமனே நினைத்துக்கொண்டிருக்கிற காரியம் அல்ல; ஆனால், நீங்கள் உண்மையாகவே அறிந்திருக்கிற காரியமாகும். விசுவாசம் என்பது... 128. கடந்த ஞாயிற்றுக்கிழமை நான், “நான் பசியினால் மரித்துக்கொண்டிருந்தால், நான் கேட்டால்...” என்று கூறினேன். ஒரு ரொட்டித் துண்டு என்னுடைய உயிரைக் காப்பாற்றக்கூடும். நீங்கள் எனக்கு இருபத்தைந்து சென்ட் கொடுத்தால், அந்த ரொட்டி என்னிடம் இருப்பதுபோலவே நான் சந்தோஷப்பட முடியும். ஏனென்றால், அங்கே ஏராளமான ரொட்டிகள் இருக்கின்றன. 129. அதேபோல, சுகமளிப்பதற்கும் ஏராளமான வல்லமை இருக்கிறது. “நீ விசுவாசிக்கக்கூடுமானால்,” அதுதான் அந்த இருபத்தைந்து சென்ட். நான் சந்தோஷப்பட முடியும். ஏனென்றால், ஒருவேளை அந்த ரொட்டி என்னிடமிருந்து பத்து மைல் தொலைவில் இருக்கலாம். ஆனால், அந்த இருபத்தைந்து சென்ட் என்னிடம் இருக்கும்போது, விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியாயிருக்கிறது. அந்த ரொட்டியை நான் சாப்பிட்டுக்கொண்டிருப்பதைப்போலவே, அந்த இருபத்தைந்து சென்ட்டை வைத்துக்கொண்டும் நான் சந்தோஷமாக இருக்கிறேன். இன்னும் நான் வெகுதூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தாலும், ஓடைகளின் படுகைகளைக் கடந்து, ஆற்றின் ஆழமற்ற கடக்கும் இடங்களைக் கடந்து, கால்நடையாக நடப்பதற்காகக் குறுக்கே போடப்பட்ட மரக்கட்டைகளின்மேல் நடந்து, முட்செடிகள் நிறைந்த புதர்களின் வழியாகச் சென்று, மலைமேல் ஏறிக் கடக்க வேண்டியிருந்தாலும் சரி. தொடர்ந்து எனக்குப் பசி அதிகரித்துக்கொண்டே போகலாம். நான் மிகவும் பசியாயிருப்பதால் வயிற்றில் பிடிப்புகள்கூட ஏற்படலாம். ஆனாலும், நான் எல்லா நேரத்திலும் சந்தோஷப்பட்டுக்கொண்டே இருப்பேன். ஏனென்றால், அந்த ரொட்டியை வாங்குவதற்கான இருபத்தைந்து சென்ட் என்னுடைய கையில் இருக்கிறது. சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை. 130. தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்ற விசுவாசத்தைத் தன்னுடைய இருதயத்தில் வைத்துக்கொண்டு, ஆபிரகாம் இருபத்தைந்து வருடங்களாகச் சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தார். அவர் கேட்டுக்கொண்டதைப் பெற்றுக்கொண்டார். 131. அங்கே இருக்கிற என் அருமையான, பிரியமான சகோதரியே, சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும், அந்த இருபத்தைந்து சென்ட்டை, அதாவது அந்த விசுவாசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். விசுவாசம்—F-A-I-T-H. அதை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் இருதயத்தில் வைத்துக்கொள்ளுங்கள். “என்ன நடந்தாலும் சரி...” என்று சொல்லுங்கள். இப்போது, நீங்கள் விசுவாசிப்பதுபோல வெறுமனே பாவனை செய்ய முடியாது. நீங்கள் உண்மையாகவே விசுவாசிக்க வேண்டும். “என்னுடைய பிள்ளை உயிரோடிருப்பாள். ஏனென்றால், என்னுடைய இருதயத்தில்... தேவன் ஒரு வாக்குத்தத்தத்தைச் செய்திருக்கிறார். அதை விசுவாசிப்பதற்கான விசுவாசம் எனக்கு இருக்கிறது” என்று சொல்லுங்கள். அதன் பிறகு மற்ற எல்லாக் காரியங்களும் எதிர்மறையானவைகளாகிவிடுகின்றன. பார்த்தீர்களா? தேவன் அதை அந்த—அந்த நிலைக்குள்ளாகவே நகர்த்துகிறார். 132. அந்தப் பெண்மணி நேற்று என்னைத் தொலைபேசியில் அழைத்தார். வீட்டிலிருந்த சிலர் தொலைபேசியை எடுத்தார்கள். ஆனால், அவர்களிடம் பேச அவர் விரும்பவில்லை. என் மனைவி தொலைபேசியை எடுத்தாள். அவளிடமும் பேச அவர் விரும்பவில்லை. என்னிடமே பேச வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர், “சகோதரர் பிரன்ஹாமே, நான் உங்களுடைய நாமத்தைத் துதித்துக்கொண்டிருக்கிறேன்” என்று கூறினார். நான், “என்னுடைய நாமத்தையா? எதற்காக அப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர், “ஓ, நீங்கள் மட்டும் இப்போது என்னைப் பார்க்க முடியுமானால்!” என்று கூறினார். நான், “அப்படியானால் தேவனைத் துதியுங்கள். ஏனென்றால், அதைச் செய்தவர் அவர்தான்” என்று சொன்னேன். 133. அவர், “மருத்துவர்களால் இப்போது அந்த இரத்தக் கட்டியின் ஒரு சிறிய துண்டைக்கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. அது சிதறி முற்றிலுமாக மறைந்துபோய்விட்டது. நான் இப்போது இயல்பான நிலையில் இருக்கிறேன். நல்ல ஆரோக்கியத்துடன் நடமாடிக்கொண்டிருக்கிறேன். பல வருடங்களாக எனக்கு இருந்த ஆரோக்கியத்தைவிட இப்பொழுது மிகச் சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்” என்று கூறினார். அவருடைய பெயர் திருமதி ரைட். அவர் இப்போது வசிப்பது... அவருடைய முதல் பெயரை அவர் என்னிடம் கூறினார். நியூ ஆல்பனியில் எங்கோ வசிக்கிறார். இப்போது எனக்குச் சரியாகத் தெரியவில்லை. 134. கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது ஒரு வாரத்திற்கு முன்பு, இங்கே பகுத்தறிதல் நடந்துகொண்டிருந்தபோது, நான் இங்கே நின்றுகொண்டு, “கூடார சபையைச் சேர்ந்தவர்கள் யாரும் எனக்கு வேண்டாம். இந்தக் கூடார சபையைச் சேராதவர்கள்தான் எனக்கு வேண்டும். பரிசுத்த ஆவியானவர் பேசட்டும்” என்று கூறினேன். ஆனால், எப்படியோ, மிகவும் பின்னால், ஏதோ ஒரு பக்கத்தில், ஹிக்கர்சன் என்ற பெயருள்ள ஒரு சிறிய மனிதர் இருந்தார். சகோதரர் ஹிக்கர்சனை நாம் எல்லோரும் அறிவோம். அவர் உண்மையாகவே தேவனுடைய கிருபைக்குக் கிடைத்த ஒரு வெற்றிச் சின்னமாக இருக்கிறார். அவர் சில மனிதர்களுக்குக் கீழாகத் தாழ்ந்து ஒதுங்கி அமர்ந்துகொண்டார். நான் அவரை அடையாளங்கூடக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் ஏற்கெனவே ஒழுங்குபடுத்தி வைத்திருந்தார். அவர் அங்கே பின்னால் அமர்ந்திருந்த ஒரு மனிதனுடைய கையின் இடைவெளி வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை. 135. நான், “அந்த மனிதனுடைய கையின் இடைவெளி வழியாக என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிற அந்தச் சிறிய மனிதர், தனக்குப் பிரியமான ஒருவருக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறார். அவர் ஒரு சகோதரர் அல்லது மைத்துனர், அல்லது அதுபோன்ற உறவினராக இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். அவர் மனநோயாளிகள் காப்பகத்தில் இருக்கிறார். அவருடைய மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது. அவர் ஒருபோதும் குணமடைவார் என்ற நம்பிக்கையே இல்லை” என்று கூறினேன். அப்போது அது, “கர்த்தர் உரைக்கிறதாவது: அவர் குணமடைவார்” என்று கூறியது. அந்தச் சிறிய மனிதர் அதை விசுவாசித்தார். ஆனாலும், அதற்குப் பிறகு பல நாட்கள் வரைக்கும் எனக்கு அதைக் குறித்து ஒன்றுமே தெரியவில்லை. 136. நேற்று, கென்டக்கியிலுள்ள அந்த மனநோயாளிகள் காப்பகத்திலிருந்து, “முழுமையாக இயல்பான நிலையிலுள்ள, ஆரோக்கியமான ஒரு மனிதர்” என்று கூறி அவரை விடுவித்தார்கள். மேலும், நம்முடைய சிறிய மெத்தடிஸ்ட் பிரசங்க சகோதரராகிய சகோதரர் காலின்ஸ், தேவனுடைய கிருபைக்குக் கிடைத்த மற்றொரு வெற்றிச் சின்னமாக இருக்கிறார். இன்று காலையில் அவர் இங்கே இருக்கலாம். அவர்கள் இருவரும், அவர்கள் எல்லோரும் இங்கே இருக்கலாம். ஜார்ஜியாவிலிருந்து வந்த சகோதரர் பால்மருடன் சேர்ந்து, நேற்று இரவு என்னுடைய வீட்டிற்கு வந்தார்கள். மனநோயாளிகள் காப்பகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட அந்த மனிதர், லூயிவில்லுக்குச் செல்லும் வழியில் இங்கே வந்துசென்றதாக அவர்கள் கூறிக்கொண்டிருந்தார்கள். அவரும் இரட்சிக்கப்பட்டிருக்கிறார். அவர் செய்திருந்த எல்லாத் தவறுகளுக்கும் பரிகாரம் செய்து, அவற்றைச் சரிசெய்வதற்காக அங்கே சென்றுகொண்டிருந்தார். ஒரு வெற்றிச் சின்னம்! தேவனுடைய அழிவில்லாத கிருபை! 137. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். சத்துரு உங்களை ஏமாற்றும்படி விட்டுவிடாதீர்கள். அழிவில்லாத ஒரு ஒளி பிரகாசித்துக்கொண்டிருக்கிறது. அந்த அழிவில்லாத ஒளி தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே. அவரை விசுவாசியுங்கள். அந்த விசுவாசத்தை உங்கள் இருதயத்தில் நங்கூரமிடுங்கள். அதை விசுவாசமாக ஏற்றுக்கொள்ளுங்கள். 138. நாம் ஜெபிப்போம். உங்கள்மேல் கைகளை வைத்து, எண்ணெய் பூசுவோம். சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும், தேவன் என்ன செய்வார் என்பதைக் கவனியுங்கள். 139. இயேசு மாற்கு 11:24-ல் கூறினார். அவர், “நீ இந்த மலையைப் பார்த்து, ‘நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ’ என்று சொல்லி, உன் இருதயத்தில் சந்தேகப்படாமல், நீ சொன்னது நிறைவேறும் என்று விசுவாசித்தால், நீ சொன்னபடியே ஆகும்” என்று கூறினார். 140. இப்போது, கிரேக்க மொழியின் அசல் சொற்பொருள் அகராதியிலிருந்து நான் மேற்கோள் காட்டுகிறேன். அது மூல கிரேக்க மொழியாகும். அதில் இவ்விதமாக எழுதப்பட்டிருக்கிறது: “நீ இந்த மலையைப் பார்த்து, ‘நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே எறியப்படுவாயாக’ என்று சொல்லி, உன் இருதயத்தில் சந்தேகப்படாமல், நீ சொன்னது நிறைவேறிக்கொண்டிருக்கிறது என்று விசுவாசித்தால், நீ சொன்னதைப் பெற்றுக்கொள்ள முடியும்.” 141. நீங்கள், “மலையே, பெயர்ந்துபோ” என்று சொன்னபோதும், அது இன்னும் அங்கேயே நின்றுகொண்டிருந்தால், “நல்லது, அது நடக்கவில்லையே” என்று சொல்கிறீர்களா? ஓ, அது நடந்துவிட்டது. நீங்கள், “மலையே, பெயர்ந்துபோ” என்று சொன்னபோது, ஒருவேளை பல நூறு கோடிக்கணக்கான டன்கள் எடையுள்ள அந்த மலையிலிருந்து, முக்கியத்துவமற்றதாகத் தோன்றுகிற ஒரே ஒரு சிறிய மணல் துகள் தளர்ந்து பெயர்ந்திருக்கலாம். ஒரே ஒரு சிறிய மணல் துகள் நகர்ந்திருக்கலாம். ஆனால், அது நடக்கத் தொடங்கிவிட்டது. அந்த விசுவாசத்தைப் பற்றிக்கொண்டு, அந்த மலை மறைந்துபோவதைக் கவனியுங்கள். நிச்சயமாகவே. 142. நீங்கள் உங்கள் இருதயத்தில், “வியாதியே, என் பிள்ளையைவிட்டு நீங்கிப்போ. வியாதியே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் என் சரீரத்தைவிட்டு நீங்கிப்போ” என்று சொல்லி, சந்தேகப்படாமல் இருங்கள். அந்தக் கணத்திலேயே நல்ல கிருமிகள் புதிய கவசத்தையும் புதிய ஆயுதத்தையும் தரித்துக்கொள்கின்றன. சத்துரு பின்வாங்கத் தொடங்குகிறான். அவன் தோற்கடிக்கப்பட்டுவிட்டான். ஏனென்றால், கிறிஸ்து கல்வாரியில் தம்முடைய வெள்ளைப்போளத்தின் கசப்பைப் பருகியதன் மூலமாக, பிசாசையும் அவனுடைய ஒவ்வொரு வல்லமையையும் தோற்கடித்துவிட்டார். அவனிடமிருந்த எல்லாவற்றையும் அவர் உரிந்தெடுத்துவிட்டார். இப்போது அவன் வெறும் அச்சுறுத்தலைச் செய்கிறவனாக மட்டுமே இருக்கிறான். அவனால் அதைச் செயல்படுத்த முடியும்; அவன் அதைச் செய்வான். 143. தேவனுடைய கிருபையினால், அவர் வரும்வரைக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும், அவருடைய ஒளியைப் பிரதிபலிக்கவும் நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். 144. இப்போது, கர்த்தாவே, மீதியெல்லாம் உம்முடைய கரங்களில் இருக்கிறது. இப்போது நாங்கள் இந்த ஜனங்களை அழைக்கப்போகிறோம். அவர்கள் இங்கே வந்து நின்று, ஜெபித்துக்கொள்ளும்படியாகக் கடந்து வரும்போது, பரிசுத்த ஆவியானவர் இந்தச் சிறிய கூடாரத்திற்கு வந்து, ஒவ்வொரு இருதயத்திலும் விசுவாசத்தை உண்டாக்குவாராக. அவர்கள் இன்றைக்கு இங்கிருந்து புறப்பட்டுச் சென்று, அந்த ஞானிகள் செய்ததுபோலச் செய்யட்டும். இருளான ஒரு காலத்திற்குப் பிறகு, அவர்கள் அந்த நட்சத்திரத்தை மீண்டும் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். அதேபோல, இந்த ஜனங்களும் எண்ணெய் பூசப்பட்டு, அவர்களுக்காக ஜெபிக்கப்படும்போது... யாக்கோபு சுவிசேஷத்தில், “சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்” என்று கூறினார். தேவனுடைய விசுவாசம் தங்களுடைய இருதயங்களுக்குள் பிரவேசித்திருக்கிறது என்றும், தாங்கள் கேட்டுக்கொள்கிறதைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும் அறிந்து, இந்த ஜனங்கள் மிகுந்த ஆனந்த சந்தோஷமடைவார்களாக. 145. இப்போது, பிதாவே, உம்முடைய பங்கை நீர் செய்துவிட்டீர். ஜனங்கள்மேல் கைகளை வைத்து, அவர்களுக்கு எண்ணெய் பூசுவதைத் தவிர, எனக்குத் தெரிந்தபடி செய்யக்கூடிய எல்லாவற்றையும் நான் செய்துவிட்டேன். இப்போது மீதியெல்லாம் அவர்களுடைய பொறுப்பாக இருக்கும். அது தவறிப்போகாதிருப்பதாக. இன்று காலையில் வியாதியஸ்தர்களுக்கு எண்ணெய் பூசப்படும்போது, தேவனுடைய அழிவில்லாத கடிகாரத்தின் ஒவ்வொரு சக்கரமும் பரிபூரணமாக இயங்குவதாக. இயேசு கிறிஸ்துவினிமித்தம், அவருடைய நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். உங்களால் முடியுமானால்: விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள், விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள், எல்லாம் கூடும், ...மட்டும் செய்யுங்கள் 146. அந்தப் பாடல் என்னுடைய உள்ளத்தில் எப்படிப்பட்ட உணர்வை உண்டாக்குகிறது! நூற்றுக்கணக்கான மொழிகளில், நான் மேடைக்கு வந்துகொண்டிருந்தபோது, புறமதத்தினரும் ஹாட்டென்டாட் இனத்தவர்களும் அந்தப் பாடலைப் பாடுவதைக் கேட்டிருக்கிறேன். 147. எனக்குத் தெரிந்தவரையில், இதே பெண்மணியும் இதே பியானோ இசைக்கலைஞருமானவர்தான், பதினொரு வருடங்களுக்கு முன்பு, நான் ஊழியத்திற்காகப் புறப்படுவதற்கு முன்பாக, அந்தப் பாடலை எனக்கு அறிமுகப்படுத்தினார். என்னுடைய நண்பரான பால் ரேடர் அதை எழுதினார். 148. இயேசு மலையிலிருந்து இறங்கி வந்தபோது, வலிப்பு நோயுள்ள ஒரு சிறுவனைக் கண்டார். சீஷர்களால் அதைக் குறித்து ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர், “கர்த்தாவே, என் பிள்ளைக்கு இரங்கும்” என்று கூறினார். 149. அவர், “நீ விசுவாசித்தால் என்னால் முடியும்; ஏனென்றால், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும். விசுவாசி மட்டுமே” என்று கூறினார். அங்கிருந்துதான் பால் தன்னுடைய பாடலுக்கான கருத்தை எடுத்துக்கொண்டார். ...விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள்; ...மட்டும் செய்யுங்கள் 150. இப்போது, உங்கள் வியாதியைவிட்டு உங்கள் பார்வையைத் திருப்புங்கள். ...விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள், உங்களால் அதைச் செய்ய முடியாதா? எல்லாம் கூடும், ...மட்டும் செய்யுங்கள் 151. அவர் இங்கே நின்றுகொண்டிருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவர் மிகவும் அன்பானவர். அவர் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அவர் தம்முடைய ஒளிகளைப் பிரதிபலிக்கிறார். மற்றவர்கள் சுகமாக்கப்படுவதைக் கவனியுங்கள். நிச்சயமாகவே, நீங்களும் சுகமாக்கப்பட முடியும். “என்னைப் பாருங்கள்” என்று, சுகமாக்கப்பட்ட ஒரு குருடன் கூறுகிறான். பார்த்தீர்களா? மற்றவர்களைப் பாருங்கள். கர்த்தர் என்ன செய்திருக்கிறார் என்பதைக் கவனித்துப் பாருங்கள். ஓ, என்னே! ...கூடும், 152. இப்பொழுதே உங்கள் இருதயத்தில் விசுவாசம் இருக்கிறது என்று உங்களில் எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? “இந்தக் காரியம் தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுதே நான் அவரை ஏற்றுக்கொள்ள முடியும் என்று விசுவாசிக்கிறேன். நான் சுகமடைவேன் என்று என்னால் சொல்ல முடியும் என்பதை விசுவாசிக்கிறேன். என்ன நடந்தாலும் சரி, இந்த வியாதியாகிய மலையைப் பார்த்து, ‘நீ பெயர்ந்துபோய், என்னைவிட்டு அல்லது எனக்குப் பிரியமானவர்களைவிட்டு, அல்லது அது எதுவாக இருந்தாலும் அதைவிட்டு நீங்கிப்போ’ என்று நான் சொல்லுகிறேன். அது நிறைவேறும் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று சொல்லக்கூடிய விசுவாசம் உங்கள் இருதயத்தில் இருக்கிறது என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? 153. என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள். அந்த வியாதி கிழித்துக்கொண்டு போகத் தொடங்கும். அது நகரத் தொடங்கும். நீங்கள் அறிந்துகொள்வதற்கு முன்பாகவே மருத்துவர், “இங்கே என்ன நடந்திருக்கிறது?” என்று கேட்பார். அது சரிதான். நீங்கள் விசுவாசிக்கக்கூடுமானால். 154. சகோதரர் நெவில், நீங்கள் இங்கே வருவீர்களா? இப்போது இந்த நடைபாதையில் இருக்கிறவர்கள் இந்தப் பக்கமாக எழுந்து நில்லுங்கள். இந்த நடைபாதையில் இருக்கிற நீங்கள், தயவுசெய்து பின்னால் சுற்றிச் சென்று, இந்தப் பக்கமாக வாருங்கள். அப்பொழுது நாம் ஒரே ஒரு வரிசையை அமைத்துக்கொள்ள முடியும். ஜனங்களுக்காக ஜெபிக்கப்படும்போது, அவர்களோடு நிற்பதற்காகச் சபையின் மூப்பர்களை முன்னால் வரும்படி அழைப்போம். 155. இப்போது, அந்தச் சிறுமிக்காக, நாங்கள் கீழே நடந்து சென்று, இங்கே படுத்திருக்கிற இந்தச் சிறிய குழந்தைக்காக ஜெபிப்போம். அவள் இருக்கிற இடத்திற்கே நாங்கள் நேராக வருவோம். 156. நான் விரும்புவது என்னவென்றால்... ஜெபித்துக்கொள்ள வேண்டிய மற்றவர்கள் இப்போது அந்தப் பக்கமாகச் செல்லுங்கள். இப்போது இங்கே இருக்கிற ஒவ்வொருவரும் ஜெபத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தக் காரியத்தில் உங்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. அங்கே நின்றுகொண்டிருக்கிற உதவியாளர்கள், இந்த நேரத்தில் நீங்கள் எந்த வரிசையில் நிற்க வேண்டும் என்பதை உங்களுக்கு வழிகாட்டுவார்கள். எல்லாம் கூடும், விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள். பயப்படாதே, சிறுமந்தையே, சிலுவையிலிருந்து சிங்காசனத்திற்கும், மரணத்திலிருந்து ஜீவனுக்கும், அவர் தமக்குச் சொந்தமானவர்களுக்காகச் சென்றார்; பூமியிலுள்ள சகல வல்லமையும், மேலான பரலோகத்திலுள்ள சகல வல்லமையும், அவருடைய அன்பின் மந்தைக்காக அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்ன சொல்லுகிறது? விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள், விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள், எல்லாம் கூடும், விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள்; விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள், விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள், எல்லாம் கூடும், விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள். 157. என் அருமையான நண்பர்களே, இப்போது இங்கே அநேகர் உங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள். நல்ல ஆண்களும் நல்ல பெண்களும், பரிசுத்தமானவர்களும் தேவபக்தியுள்ளவர்களுமான பெண்களும் ஆண்களும் ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள். 158. என்னுடைய சகோதரர் நெவில் இங்கே என் அருகில் நின்றுகொண்டிருக்கிறார். அவர் தேவபக்தியுள்ள ஒரு மனிதர் என்பதை நான் பல வருடங்களாக அறிந்திருக்கிறேன். வெளியூர்களிலிருந்து இங்கே வருகிறவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து, “உங்களுடைய போதகராக இருக்கிற அந்தச் சிறிய மனிதர் யார்? அவருடைய முகவரியை எனக்குக் கொடுங்கள். நான் அவருக்குக் கடிதம் எழுத விரும்புகிறேன். அவர் மிகவும் உண்மையுள்ள மனிதராகத் தோன்றுகிறார்” என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு, “எனக்குத் தெரிந்தவர்களிலேயே மிகவும் தேவபக்தியுள்ள மனிதர்களில் அவரும் ஒருவர்” என்று என்னால் சொல்ல முடிவதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். அவர் எதைப் பிரசங்கிக்கிறாரோ, எதைக் குறித்துப் பேசுகிறாரோ, அதன்படியே வாழ்கிறார். அபிஷேகத் தைலக்குடுவையை அவர் தம்முடைய கையில் வைத்திருக்கிறார். தேவன் தம்முடைய கரத்தில் வல்லமையை வைத்திருக்கிறார். 159. உங்கள் இருதயத்தில் விசுவாசம் இருக்கிறதா? அப்படியிருந்தால், அது நடந்தே ஆக வேண்டும். இங்கே இந்தப் பகுதி முழுவதும் ஊழியக்காரர்களும், தேவபக்தியுள்ள ஜனங்களும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்காக ஜெபிக்கப்போகிறார்கள். இப்போது ஏதோ ஒன்று நடந்தே ஆக வேண்டும். 160. ஏதோ ஒன்று உங்களை இவ்வளவு தூரம் கொண்டுவந்திருக்கிறது. அது அந்த நட்சத்திரம்தான். இப்போது, அந்த நட்சத்திரம், அந்த விடிவெள்ளி நட்சத்திரம். இப்போது அழிவில்லாத நித்திய ஒளியைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பது போன்ற இந்த ஒழுங்குமுறைகளை நாங்கள் பின்பற்றுகிறோம். அல்லது வேறு எந்தக் காரியமாக இருந்தாலும் சரி, பார்த்தீர்களா? “வியாதியஸ்தர்களுக்கு எண்ணெய் பூசி, அவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்; விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்.” 161. இயேசு தம்முடைய சபைக்குக் கூறிய கடைசி வார்த்தைகளில், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்; அவர்கள் வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்று கூறினார். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், உங்களுக்கு எளிதாகப் புரியக்கூடிய வார்த்தைகளில் நான் இவ்விதமாகக் கூறுவேன்: “இந்தச் சுவிசேஷம் உலகமெங்கிலும் எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் என்னுடைய ஊழியக்காரர்கள் வியாதியஸ்தர்கள்மேல் கைகளை வைப்பார்கள்; அவர்கள் சுகமடைவார்கள்.” அது சரிதான். பார்த்தீர்களா? 162. இப்போது, அதைக் கண்டனம் செய்யக்கூடிய ஒரே ஒரு காரியம் இருக்கிறது. அதுதான் அவிசுவாசம். பாருங்கள், அது சார்ந்திருப்பது... ஒருவேளை—ஒருவேளை ஒரு சகோதரரும் நானும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்குத் தகுதியற்றவர்களாக இருந்தாலும்கூட; உண்மையில், அவருடைய கிருபையினாலன்றி நாங்கள் தகுதியுள்ளவர்கள் அல்ல. ஆனால், நாங்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், அது அவருடைய வார்த்தையாக இருக்கிறது. அவர்—அவர் எங்களுக்காக உறுதியாக நிற்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், தம்முடைய வார்த்தைக்காக அவர் உறுதியாக நின்றே ஆக வேண்டும். “நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும்.” 163. இப்போது அங்கே சபையில் அமர்ந்திருக்கிற உங்களில் எத்தனை பேர் இந்த ஜனங்களுக்காக ஜெபிக்கப்போகிறீர்கள்? உங்கள் கைகளை உயர்த்துங்கள். நீங்கள் எல்லோரும் அங்கே பாருங்கள் என்று விரும்புகிறேன். இப்போது உங்களுக்காக அந்த ஜெபங்கள் பரலோகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. இப்போது ஒவ்வொருவரும் தங்கள் தலைகளைத் தாழ்த்தி, சகோதரர் எண்ணெய் பூசிக்கொண்டிருக்கும்போது, எல்லோரும் ஜெபித்துக்கொண்டிருங்கள். 164. இப்போது ஒரு நிமிடம் பொறுங்கள். இங்கே இருக்கிற இவர்களுக்காக நாம் இந்தச் சபை ஜெபத்தை ஏறெடுப்போம். 165. இரக்கமுள்ள கர்த்தாவே, ஊழியக்காரர்களுக்குரிய கடமையை நிறைவேற்றுவதற்காக, உம்முடைய ஊழியக்காரர்களாகிய நாங்கள் இப்போது முன்னேறிச் செல்கிறோம். கர்த்தாவே, இங்கே வரிசையில் நிற்கிற அநேகர் மிகவும், மிகவும் வியாதியுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களில் சிலர் மரணத்திற்கு அருகில் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இன்னும் தங்களுடைய இருக்கைகளிலேயே அமர்ந்திருக்கிறார்கள். உதாரணமாக, புளோரிடாவிலிருந்து கொண்டுவரப்பட்ட அந்தச் சிறுமி இருக்கிறாள். ஜார்ஜியாவிலிருந்தும், பல்வேறு இடங்களிலிருந்தும், இண்டியானாபோலிஸ் வரையிலுமிருந்தும், ஓஹையோவிலிருந்தும் சிலர் இங்கே வந்திருக்கிறார்கள். இன்று காலையில் இந்தச் சிறிய கூட்டத்தில் அவர்கள் ஒன்றுகூடியிருக்கிறார்கள். அவர்களுக்காக ஜெபிக்கப்படும் நேரத்திற்காகக் காத்துக்கொண்டு, தங்கும் விடுதிகளிலும் மற்ற இடங்களிலும் தங்கியிருந்தார்கள். அவர்கள் ஆராதனைகளில் கலந்துகொண்டிருக்கிறார்கள். உம்முடைய கரம் அசைந்து கிரியை செய்வதை அவர்கள் கவனித்திருக்கிறார்கள். இப்போது இங்கேயே அந்த... கர்த்தாவே, சாண்டா கிளாஸைப் பற்றிய கட்டுக்கதையை அகற்றிவிட்டு, உண்மையான கிறிஸ்துமஸ் பரிசை அவர்களுக்குக் கொண்டுவாரும். கர்த்தாவே, இப்பொழுதே அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தந்தருளும். ஏனென்றால், அவர்கள் விசுவாசித்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். 166. மேலும், அவர்களுக்காகப் பரிந்துபேசுவதற்கும், ஜெபிப்பதற்கும், அவர்களுடைய சார்பாக எங்களுடைய சொந்தக் குரலை எழுப்புவதற்குமாக, அவர்களுக்கும் பரலோகத்தின் தேவனாகிய கர்த்தருக்கும் இடையில் நாங்கள் வந்து நிற்கிறோம். கர்த்தாவே, அவர்களில் ஒருவர்கூட விசுவாசமற்றவர்களாகிவிடாதபடி அருளும். 167. வேதவாக்கியம் அதைக் கூறுகிறது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். அதை நாங்கள் விசுவாசிக்கிறோம் என்பதையும் அறிந்திருக்கிறோம். இப்போது, கர்த்தாவே, அவர்களும் அதை விசுவாசித்து, தாங்கள் கேட்டுக்கொண்டதைப் பெற்றுக்கொள்வார்களாக. இந்தச் சபையின் முழுச் சரீரத்தோடுகூட, அவர்களுடைய சுகமளித்தலுக்காக ஒருமனப்பட்டு ஜெபித்துக்கொண்டு, கிறிஸ்துவின் ஸ்தானாபதிகளாக நாங்கள் இப்போது முன்னேறிச் செல்கிறோம். அப்படியே ஆகக்கடவது. அவர்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்போது, மிகுந்த ஆனந்த சந்தோஷத்தோடு செல்லட்டும். ஏனென்றால், அந்த—அந்த விடியற்கால ஒளி நம்மேல் உதித்திருக்கிறது. பரலோகத்தின் பேரொளிகள் நம்முடைய பக்கமாகத் திரும்பியிருக்கின்றன. உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவை அவருடைய வல்லமையிலும் மகிமையிலும் நாம் காண்கிறோம். ஆமென். 168. அவருக்கு எண்ணெய் பூசப்படுகிற இந்த நேரத்தில், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் அவர்மேல் கைகளை வைத்து, சர்வவல்லமையுள்ள தேவனுடைய கரத்தினால் அவருடைய வியாதி சுகமாக்கப்பட வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் கேட்டுக்கொள்கிறோம். ஆமென். 169. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் சென்று அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். 170. அவருக்கு எண்ணெய் பூசப்படுகிற இந்த நேரத்தில், அவருடைய இருதயத்தின் வாஞ்சை அவருக்கு அருளப்பட வேண்டும் என்று கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கேட்டுக்கொள்கிறோம். ஆமென். 171. எண்ணெய் பூசப்பட்ட நிலையில், நம்முடைய சகோதரர்மேல் நாங்கள் கைகளை வைக்கிறோம், நாமத்தில்...